பியூஷ் கோயல் இன்று சென்னை வருகை.. கூட்டணியில் இணையும் புது கட்சி.. அதிரடிக்கும் ரகசிய சந்திப்பு
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்கிற வியூகத்துடன் அதிமுக பாஜக கூட்டணி களமிறங்கியுள்ளது. எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி பழனிசாமி - டி.டி.வி தினகரனை கூட்டணியில் இணைத்துள்ளனர். கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சரும், சட்டமன்ற தேர்தலுக்கான தமிழ்நாடு பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று சென்னை வரவுள்ளார். கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது தொடர்பாக சில முக்கிய சந்திப்புகளை அவர் நிகழ்த்த திட்டமிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். பிரச்சாரம், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள் ஆகியவற்றால் களம் பரபரப்பாகியுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி
திமுகவை வீழ்த்த அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு வியூகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா தமிழ்நாடு அரசியலை நேரடியாக கண்காணித்து வருகிறார். மற்றொரு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாஜக தமிழ்நாடு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த வாரம் தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாடு நடைபெற்றது. இது அந்தக் கூட்டணிக்கு சற்று நம்பிக்கையை கொடுத்துள்ளது. கூட்டணி, வியூகங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பியூஷ் கோயல் ஆய்வு செய்து வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்டோர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
பியூஷ் கோயல் சென்னை வருகை
ஆனால் பன்னீர்செல்வத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நோ சொல்லிவிட்டார். தேமுதிக மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் பிடி கொடுக்காமல் இருக்கிறார்கள். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பியூஷ் கோயல் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை வரவுள்ளார். சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
இன்று காலை பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் சுற்றுப்பயணம் மற்றும் மக்கள் குறை தீர்ப்புப் பெட்டி சுற்றுப் பயணம் ஆகியவற்றை பியூஷ் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜகவின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். அவர்களுடன் பியூஷ் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அடுத்தகட்டமாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
பாஜக நம்பிக்கை
முக்கியமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது தொடர்பாக பியூஷ் கோயல் முக்கிய சந்திப்புகளை நிகழ்த்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு கட்சி நிர்வாகிகளையும் அவர் சந்திக்கவுள்ளார். பியூஷின் இன்றைய விசிட்டிற்கு பிறகு அந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் அதிகாரபூர்வமாக இணையலாம் என்று பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications