தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருவது உறுதி.. எதிர்த்த மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி
சென்னை: தமிழகத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வரும் ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்தார்.

இதில், பால் கவர், எண்ணை கவர் உள்ளிட்ட சில பொருட்களுக்கு, விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உற்பத்தியாகி, தமிழகம் வரக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்த அரசு அனுமதி அளித்திருந்தது.
தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு புதுவை பிளாஸ்டிக் வியாபாரிகள் சங்கம் அவசர வழக்கை தாக்கல் செய்தது.
வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அமர்வு முன்னிலையில் இன்று, விசாரணைக்கு வந்தது.
பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், இந்த உத்தரவால், சிறு தொழில்கள் பாதிக்கப்படும். வேலைவாய்ப்புகள் பறிபோகும். பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிடுகிறார்கள் என்றும் பிற மாநிலங்களில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை அனுமதிக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கவேண்டும். விதிவிலக்குகள் கூட அளிக்கக்கூடாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications