“இருபெரும் தாயர்க்கு உடல் நலமில்லை!” பி.சுசீலாவும், தனது தாயும் நலம்பெற வேண்டிய வைரமுத்து!
சென்னை: கடந்த சில நாட்களாக மூத்த பின்னணி பாடகியான பி.சுசீலா உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார். இந்நிலையில், இது தொடர்பாக தனது x தளத்தில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, "இருபெரும் தாயர்க்கு உடல் நலமில்லை!" என்று கூறியுள்ளார்.
அவரது தாய்க்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதை பதிவு செய்துள்ள வைரமுத்து இருவரும் நலம் பெற்று வர வேண்டும் என வேண்டியுள்ளார். தனது x தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

"இருபெரும் தாயர்க்கு
உடல் நலமில்லை
ஒருவர்
எனக்குப் பாலூட்டிய தாய்
அங்கம்மாள் ராமசாமி
இன்னொருவர்
எனக்குப் பாட்டூட்டிய தாய்
பி.சுசீலா
நாட்டார் தமிழைக்
கற்பித்தவர் பெற்றதாய்;
பாட்டார் தமிழைக்
கற்பித்தவர் உற்றதாய்
தாங்குதுணை இல்லாமல்
தன்னியக்கம் இல்லை
இருவர்க்கும்
சற்றொப்பச் சமவயதுகொண்ட
தாய்மார்கள்
இருவர்க்குமே வாழ்வு
சர்க்கரையால் கசக்கிறது
நான் பாசத்தோடு படைக்கும்
சத்துமாவுக் கஞ்சிதான்
இருவர்க்கும் ஆகாரம்
இருவரையும்
மாறிமாறி நலம்கேட்கிறேன்
அந்த நான்கு கரங்களையும்
பற்றும்பொழுது
நடுங்குகின்றன
என்னிரு கரங்களும்
இருபெரும் தாயரும்
நலமுற வேண்டும்;
நெடுங்காலம்
நீடு வாழவேண்டும்
"பறவை பறந்துசெல்ல
விடுவேனா - அந்தப்
பரம்பொருள் வந்தாலும் தருவேனா?
உன்னை அழைத்துச்செல்ல
எண்ணும் தலைவனிடம்
என்னையே நான்தர மறுப்பேனா?"
ஒருவர் பாடிய பாடல்
இருவர்க்கும் காணிக்கை
அன்னையர் இருவரும்
ஆண்டுபல நீண்டுவாழ
வேண்டுமென்று
வேண்டுகின்றேன்
யாண்டுமுள்ள நண்பர்களை"
என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications