பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம் என ஐகோர்ட்டில் முறையீடு.. தலைமை நீதிபதி சொன்ன வார்த்தை
சென்னை: தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறை தலைவராக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து தமிழக காவல்துறையின் நிர்வாக டி.ஜி.பி. வெங்கடராமன் தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து காவல்துறை தலைமையகத்தில் சங்கர் ஜிவால், பொறுப்பு டி.ஜி.பியாக பதவியேற்ற ஜி. வெங்கட்ராமனிடம் நேற்று முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார்.

இந்நிலையில் பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் வரதராஜ் என்பவர் சார்பில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
மனுதாரர் தரப்பில் முறையிட்ட வழக்கறிஞர் பிரசாந்த் நடராஜ், தற்காலிக அடிப்படையில் டிஜிபி-யை நியமிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் அடிப்படையில் பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமனை நியமித்தது சட்டவிரோதம். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்படவுள்ள மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
முன்னதாக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டு உள்ளதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் தொடர்ந்துள்ளார். மாநில டிஜிபி நியமனங்களில் பொறுப்பு என்ற பதவியை பயன்படுத்த கூடாது என எச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் உத்தரவிட்டு இருந்தது.
எனினும் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், சங்கர் ஜிவால் பணி ஓய்வை தொடர்ந்து, பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் என்பவரை நியமித்துள்ளதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தவெக நிர்வாகி அருண்ராஜ் உள்பட பலரும் குற்றம்சாட்டி இருந்தனர். இந்த நிலையில் பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications