தமிழ்நாட்டுல என்ன சொல்லி ஓட்டு கேக்குறதுன்னே மோடிக்கு தெரியல.. அதான் இப்படி.. விளாசும் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டிற்கு என்ன செய்தோம் என்பதைச் சொல்ல இயலாத நிலையில், பா.ஜ.க அரசின் தோல்வியைத் திசைதிருப்பவே திமுகவை விமர்சிக்கிறார் பிரதமர் மோடி எனக் கூறியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அண்மையில் தெலுங்கானாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில், கோவில் சொத்துகள் திமுக அரசால் அபகரிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். பிரதமரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தமிழக பாஜக இந்த விஷயத்தை தீவிரமாக கையில் எடுத்தது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த விவகாரத்தை பாஜக முன்னிறுத்தும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கொடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். தனியார் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

PM Modi is unable to say what he has done to Tamil Nadu: MK Stalin attacks

இந்தியில் பெயர்: மத்திய அரசு புதிதாகக் கொண்டு வரும் மசோதாக்களுக்கு இந்தியில் பெயர் வைக்கிறது. ஏற்கனவே உள்ள சட்டங்களும் இந்தியில் பெயர் மாற்றம் செய்யப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், "இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவை, மக்களவை இரண்டிலுமே தி.மு.க.வின் எம்.பி.,க்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க இந்தியிலான அறிவிப்புகள், அழைப்பிதழ்களைக் கிழித்தெறிந்து எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். பா.ஜ.க. அரசின் ஒரே நாடு, ஒரே மொழி என்கிற மறைமுகத் திட்டம், தமிழை மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் பேசப்படும் அவரவர் தாய்மொழிகளுக்கும் எந்தளவு ஆபத்தை உண்டாக்கும் என்பதை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பல மாநிலங்களிலும் இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எந்த ஒரு மொழிக்கும் எதிரிகள் அல்ல. எங்கள் மொழி மீது எந்தவொரு மொழியைத் திணித்தாலும் அதை உறுதியாக எதிர்ப்பவர்கள். அந்த நிலை தொடரும். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அமையவிருக்கிற புதிய ஆட்சியில் அனைத்து மொழிகளுக்கும் உரிய உரிமையும் முக்கியத்துவமும் சமமாக வழங்கப்படும்." என்றார்.

ஆளுநர் பதவியை அசிங்கப்படுத்தி: கோயில்களின் கட்டுப்பாடு அறநிலையத்துறையிடம் இருப்பதை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளாரே.. அவரின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசின் பதில் என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், "திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 1,118 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான 5,473 கோடி ரூபாய் மதிப்புள்ள 5,820 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் பிரதமரும் பேசியிருக்கிறார். அதற்கு நான் ஏற்கெனவே பதில் அளித்துவிட்டேன். இன்றைக்கு பா.ஜ.க. ஆட்சியில் என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டித் தர இயலவில்லை. நீட் மசோதாவிற்கு ஒப்புதல் தர முடியவில்லை. மாநிலத்திற்கு உரிய நிதி உரிமை - மாநில உரிமையை வழங்குவதில்லை. தமிழ்நாடு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்காமல், அரசியல் பேசி, அரசியல் சட்டப் பதவியான ஆளுநர் பதவியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவரை ஆளுநராக வைத்து, தமிழ் மொழி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு - தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது.

என்ன சொல்லி ஓட்டு கேட்பதென்றே தெரியவில்லை: தமிழ்நாட்டிற்கு 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் செய்த சாதனைகள் ஏதுமில்லை. சிறப்புத் திட்டங்கள் ஏதுமில்லை. ஆகவே மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு என்ன செய்துள்ளது என்பதைச் சொல்லி வாக்குச் சேகரிப்பதில் பிரதமருக்கு நெருடல் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு என்ன செய்தோம் என்பதைச் சொல்ல இயலாத நிலையில் - பா.ஜ.க அரசின் தோல்வியைத் திசைதிருப்பவே தமிழ்நாட்டில் சிறப்பாகக் கோவில் நிர்வாகத்தைச் செய்து கொண்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறையை விமர்சிக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

திமுக அரசுக்கு சவால்: காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமாகட்டும் பெரும் பொருட்செலவு வைக்கக்கூடிய இத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் மாநில அரசுக்கு இருக்கும் சவாலாக எதைக் கருதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், "திராவிட மாடல் அரசின் சிறப்பான திட்டங்களாக நீங்கள் குறிப்பிடும் இந்தத் திட்டங்களின் வரிசையில் மகளிருக்கான விடியல் பயணம் திட்டமும் முக்கியமானது. இவை அனைத்துமே அன்றாடத் தேவைக்கான திட்டமாக மட்டுமின்றி, எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாகவும் அமைந்துள்ள காரணத்தால், இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதில் எத்தகைய சவால்கள் இருந்தாலும் அதனை முழுமையாக நிறைவேற்றித் தருவதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது.

முந்தைய அ.தி.மு.க ஆட்சியின் பத்தாண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட கடன் சுமை - நிதிப் பற்றாக்குறை, நிர்வாகச் சீர்கேடு போன்றவற்றை சமாளித்து, தற்போதைய ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டு அணுகுமுறை போன்ற சவால்களின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபட முடியாவிட்டாலும், இரண்டு ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறது. தமிழ்நாட்டை இன்று இந்தியாவே திரும்பிப் பார்க்கும் விதமாக, தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. ஆகவே இந்தியாவுக்கே முன்னோடியான இந்த மக்கள்நலத் திட்டங்களைத் திறம்பட செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்." என்றார்.

கூட்டணி முறிந்துவிட்டதா?: பா.ஜ.க அ.தி.மு.க. கூட்டணி உண்மையிலேயே முறிந்துவிட்டதா, இதனால் கூட்டணிக் கணக்குகளில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், "சமீபத்தில் மற்ற மாநிலங்களில், பா.ஜ.க.வுடன் இருந்த கூட்டணியை ஒரு கட்சி முறித்துக் கொண்ட பிறகு நடந்த நிகழ்வுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்போது அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவு காட்சியையும் பார்க்கிறீர்கள். ஆனால் உங்களுக்கே கூட்டணி முறிந்து விட்டதா இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது. அக்கூட்டணி முறிந்தாலும் - முறியாவிட்டாலும் எங்களுக்குக் கவலை இல்லை! மத்தியில் 9 ஆண்டுகாலம் பா.ஜ.க. ஆட்சியின் அலங்கோலங்களையும் - தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

இப்போது நல்லாட்சி தரும் தி.மு.க.வை, நல்ல பல மக்கள் திட்டங்களைத் தந்துள்ள இந்த ஆட்சியை, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் சாதனைகளை படைக்கும் தி.மு.க. ஆட்சியை தமிழ்நாட்டில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எங்கள் நல்லாட்சி மீது நம்பிக்கை வைத்து களத்திற்கு செல்கிறோம். 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்களை இரண்டரை ஆண்டுகளில் மாற்றி, நிர்வாக எஞ்சினை நேர்த்தியாக செலுத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே தி.மு.க.வின் நல்லாட்சி, தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் நல்லெண்ணம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து நாங்கள் மக்களைச் சந்திக்கிறோம். மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள்". இவ்வாறு பேட்டியில் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+