திருமண அழைப்பிதழ் தர போய் கூட்டணியை பேசி முடிக்கும் டெக்னிக் கொண்ட கட்சி பாமக- வரலாறே அப்படித்தான்!
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் 'திருமண அழைப்பிதழ்' கொடுக்கப் போய் கூட்டணி அமைத்த சரித்திர சாதனைப் பக்கங்களுக்கு சொந்தமான கட்சிதான் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக). 2011-ம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக இப்படி திருமண அழைப்பிதழ் மூலம் திமுக கூட்டணியில் இணைந்த பாமக தற்போது 2026 சட்டசபை தேர்தலுக்கும் அதே டெக்னிக்கை பயன்படுத்தி அதிமுக கூட்டணிக்கு துண்டு போட்டு வைத்திருக்கிறது என்பதுதான் சுவாரசியம்.
1990களில் பாமக என்கிற கட்சி வன்னியர் ஜாதிகளின் பிரதிநிதியாக வெளிப்பட்டாலும் தமிழ், தமிழ்த் தேசியம் என்ற அடையாளத்தையும் கொண்டிருந்தது. மாற்று அரசியல், நீதி- நேர்மை- ஊழலற்ற அரசியல் என்கிற முழக்கங்களுடன் அரசியல் பயணத்தை தொடங்கிய பாமக, இதுவரை கூட்டணி சேராத கட்சி என்று எதுவுமே இல்லை என்ற நிலைமையில்தான் தற்போது இருக்கிறது.

திமுக, அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணிகளில் மாறி மாறி இடம் பெறுவதும் கூட்டணியில் இருக்கும் போது அந்த கட்சிகளின் தலைமைகளை வானளாவிய அளவில் புகழ்வதும் கூட்டணியை விட்டு வெளியேறிய போது நினைத்தே பர்க்க முடியாத அளவுக்கு விமர்சிப்பதும் அனைத்து கட்சிகளுக்கும் உரியதுதான்.. இதில் பாமகவும் விதி விலக்கு அல்ல.
2011-ல் கருணாநிதிக்கு கல்யாண பத்திரிகையும் திமுக கூட்டணியும்
தமிழ்நாட்டு அரசியலில் பாமகதான் திருமண அழைப்பிதழ் மூலம் கூட்டணி வைத்த சரித்திரத்தை எழுதி இருக்கிறது. 2011-ம் ஆண்டு முதல்வராக கருணாநி, துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியில் இருந்தனர். அப்போது பேரன் டாக்டர் சுகந்தன் திருமண அழைப்பிதழ் கொடுக்க கருணாநிதியை நேரில் சந்தித்த டாக்டர் ராமதாஸ், அன்று மாலையே திமுகவுடனான கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது தொடர்பாக பேரன் சுகந்தன் திருமண விழாவில் பேசிய டாக்டர் ராமதாஸ், பேரன் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக கருணாநிதியின் வீட்டுக்கு சென்றேன்; அப்படியே தொகுதி உடன்பாட்டையும் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு வெளியே வந்தேன் என்றார்.
2011-ம் ஆண்டு கூட்டணி நிலவரம்
2011-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக,விசிக, கொங்குநாடு முன்னேற்ற கழகம், முஸ்லிம் லீக், மூவேந்தர் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. அந்த தேர்தலில் திமுக வெறும் 23 இடங்களில்தான் வென்றது; காங்கிரஸ் 5, பாமக 3 இடங்களில் வெற்றி பெற்றன. அப்போது திமுக கூட்டணி மொத்தமே 31 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. அந்த தேர்தலில்தான் அதிமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி அமைத்து 29 இடங்களில் வென்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரானார். 2016-ம் ஆண்டு எந்த கூட்டணியிலும் இடம்பெறாமல் தனித்து களம் கண்டது பாமக.
அதிமுக தயவில் ராஜ்யசபா சீட்
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக- பாமக கூட்டணியில் இடம் பெற்றது பாமக. இதனால் அப்போது பாமகவுக்கு ராஜ்யசபா சீட்டை அதிமுகவிடம் இருந்து பெற்று தந்தது பாமக. இந்த ராஜ்யசபா சீட் மூலமே அன்புமணி எம்பியானார். தற்போது அன்புமணியின் எம்பி பதவிகாலம் முடிவடைகிறது. ஆனால் பாமகவோ, பாஜக கூட்டணியில் இருக்கிறது.
இதனால் அதிமுக கூட்டணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் பாமக இருந்து வருகிறது.
மீண்டும் திருமண பத்திரிகை கூட்டணி
இந்த சூழ்நிலையில்தான் பாமகவின் கவுரவ தலைவர் ஜிகே மணி, அண்மையில் சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பும் கூட, ஜிகே மணி இல்ல திருமண விழா அழைப்பிதழ் கொடுக்கத்தான் என கூறப்பட்டதால், சந்தேகமே இல்லாமல் இது கூட்டணி பேச்சுவார்த்தை என முடிவு கட்டிவிட்டன அரசியல் வட்டாரங்கள். ஏனெனில் திருமண அழைப்பிதழ் மூலம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கக் கூடிய சரித்திரம் கொண்ட கட்சி பாமக என்பதுதான்.
விரக்தியில் தேமுதிக
தற்போது பாமக, அதிமுக கூட்டணிக்கு வரக் கூடும் என்பதால் இதுவரை அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட் கனவுடன் காத்திருந்த தேமுதிக பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஏற்கனவே ஜெயலலிதா காலத்திலேயே அதிமுக- தேமுதிக இடையேயான உறவு மிக மோசமான நிலைக்குப் போனது. கடந்த தேர்தலில் மீண்டும் மலர்ந்த இந்த உறவு, இப்போது தேமுதிகவுக்கு அதிமுக துரோகம் செய்துவிட்டது என்கிற பழியை நோக்கி நகருகிறது. இதற்கு காரணமே பாமகவின் கூட்டணி வியூகம் என குமுறுகிறது தேமுதிக. அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்று தேர்தலை சந்தித்தால், திருமண அழைப்பிதழ் மூலம் 2-வது முறையாக கூட்டணி அமைத்த பெருமையையும் பாமக பெற்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை!












Click it and Unblock the Notifications