“20 ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க அனுமதி வழங்கி தமிழக மக்களுக்கு துரோகம்".. அன்புமணி ஆவேசம்!
சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி வழங்கி தமிழக மக்களுக்கு திமுக துரோகம் செய்து விட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ள நிலையில், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவிரி பாசன மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளை பாலைவனமாக மாற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்கக்கூடாது என பாமக வலியுறுத்தி வரும் நிலையில் அரசு அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை, கடலாடி ஆகிய வட்டங்களிலும், சிவகங்கை மாவட்டத்தின் தேவகோட்டை வட்டத்திலும் இந்த சோதனை கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. இந்த கிணறுகளை அமைக்க அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பம் செய்திருந்தது. இது குறித்த செய்திகள் வெளியான நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று பாமக வலியுறுத்தியது. இது தொடர்பான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்யும்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அனுமதிக்கப்படுவதை ஏற்க முடியாது.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அனைத்தும் ஏறக்குறைய 3000 அடி ஆழத்திற்கு அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு கிணறும் ரூ.33.75 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. நீரியல் விரிசல் என்ற இயற்கைக்கு எதிரான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வேதிப்பொருட்களின் கலவையை பூமிக்குள் செலுத்தி, பாறைகளை விலக்கி, அவற்றுக்கு நடுவில் உள்ள மீத்தேன் எரிவாயு எவ்வாறு எடுக்கப்படுமோ, அதேபோல் தான் ஹைட்ரோகார்பன் வளமும் நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்படும். இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் போது நிலநடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹைட்ரோ கார்பன் வளங்கள் எடுக்கப்பட்டால், இராமநாதபுரம் மாவட்டமே பாலைவனமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதனால் தான் இந்தத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தமிழக அரசு நினைத்திருந்தால் இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால், கிட்டத்தட்ட 20 மாதங்கள் இத்திட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்து, மக்கள் மனதில் இருந்து இவை குறித்த நினைவுகள் விலகிய பிறகு, இராமநாதபுரம் மாவட்டத்தை பாலைவனமாக்கும் சதித் திட்டத்திற்கு திமுக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்துள்ள துரோகம் ஆகும்.
காவிரி பாசன மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்து, ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும், மீத்தேன் எரிவாயு திட்டங்களையும் அனுமதிப்பது திமுகவுக்கு புதிதல்ல. 2010 ஆம் ஆண்டில் விவசாயிகளின் நலனைக் காற்றில் பறக்கவிட்டு, காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கிரேட் ஈஸ்ட்ரன் நிறுவனத்திற்கு அப்போதைய திமுக அரசு அனுமதி அளித்தது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு துரோகம் செய்திருந்தார். அதற்கு எதிராக பா.ம.க உள்ளிட்ட கட்சிகளும், உழவர் அமைப்புகளும் தீவிர போராட்டம் நடத்தியதால் தான் அந்தத் திட்டம் அப்போது செயல்படுத்தப்பட வில்லை. இப்படியாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் துரோகம் செய்வது திமுகவின் வாடிக்கை தான்.
ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதால் ஏற்படும் பாதிப்பு ராமநாதபுரம் மாவட்டத்துடன் மட்டும் நின்று விடாது. தமிழ்நாட்டில் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரையிலான பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த இதுவரை 5 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின்படி மொத்தம் 7250 சதுர கி.மீ பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இப்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 கிணறுகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதையே காரணம் காட்டி அடுத்தடுத்து பிற திட்டங்களுக்கும் அனுமதி பெற ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்கள் முயலும். அந்த முயற்சி வெற்றி பெற்றால், அதன்பின் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.
2010ஆம் ஆண்டிலிருந்தே மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் வாயிலாக காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த முயற்சிகளை முழுமையாக முறியடிக்கும் வகையில் தான் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்தது. ஐந்தாண்டுகள் தொடர் அழுத்தத்திற்குப் பிறகு 2020 ஆம் ஆண்டில் அது சாத்தியமானது. அதனால், காவிரி பாசன மாவட்டங்கள் ஓரளவு பாதுகாக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் இத்தகைய திட்டங்கள் வலிந்து திணிக்கப்படுவதை இனியும் வேடிக்கைப் பார்க்க முடியாது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பப் பெறும்படி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய 10 வருவாய் மாவட்டங்களை முழுமையாக உள்ளடக்கியதாக இருக்கும் வகையில் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் விரிவுபடுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications