சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ்.. ஓடோடி வந்து நலம் விசாரித்த அன்புமணி
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய பிரச்சினை தொடர்பாக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அன்புமணி ராமதாஸ் இன்று காலையில் அப்பலோ மருத்துவமனைக்கு சென்றார். தந்தை ராமதாசை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் (வயது 86) சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இன்று ராமதாஸ்க்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. இன்று காலை டாக்டர் ராமதாசுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்படுகிறது. செங்குட்டுவேல் தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த பரிசோதனையை அவருக்கு மேற்கொள்ள உள்ளனர். ராமதாஸ்க்கு ஏற்கனவே, கடந்த 2013-ஆம் ஆண்டு இதே மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவமனைக்குச் சென்று இதய பரிசோதனை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். ராமதாஸ் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தந்தை ராமதாஸை சந்திக்க அன்புமணி மருத்துவமனைக்கு வருகை தந்துளார்.
பாமகவில் தற்போது உள்கட்சி மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ராமதாஸ்க்கும், மகன் அன்புமணி ராமதாஸ் மோதல் ஏற்பட்டுள்ளது. அன்புமணியை கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்கினார். அதே நேரத்தில் பொதுக்குழு மூலம் தேர்வான தனக்கே கட்சியில் முழு அதிகாரம் இருப்பதாக அன்புமணி தரப்பு கூறி வருகிறது.
எனினும், பாமக தலைவராக நானே இருப்பேன். கட்சி சார்ந்த முடிவுகளை நானே எடுப்பேன் என்று கடந்த மே மாதம் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் ராமதாஸ் அறிவித்து இருந்தார். இவ்வாறாக ராமதாஸ்- அன்புமணி இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இன்று தனது தந்தையின் உடல் நலம் குறித்து விசாரிக்க அன்புமணி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications