தலைதூக்கும் ரவுடி கலாசாரம்.. சீர்குலையும் சட்டம் ஒழுங்கு.. திமுக மீது விழும் தொடர் குற்றச்சாட்டு
சென்னை: சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை திருமங்கலத்தில் திமுகவைச் சேர்ந்தவர்களால் இனிப்புக் கடை சூறையாடப்பட்டுள்ளது. திமுக அரசின் சட்டம் ஒழுங்கு லட்சம் இதுதானா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல, ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத் தவறிய தமிழக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சட்டம் - ஒழுங்கு சீர்குலையும் என்பது தான் எழுதப்படாத வரலாறாக உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் தான் சென்னையில் பெண் வணிகர் வெட்டிக்கொல்லப்பட்ட நிகழ்வும், மதுரை திருமங்கலத்தில் திமுக நகராட்சி உறுப்பினரால் கடை சூறையாடப்பட்ட நிகழ்வும் அரங்கேறியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை திருவொற்றியூரில் பழக்கடை நடத்தி வந்த கவுரி என்ற பெண் வணிகர் மாமூல் தர மறுத்ததால் அவரை பர்மா சேகர் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்திருக்கிறார். அதைத் தடுக்க முயன்ற கவுரியின் கணவர் மாரியும் கத்திக்குத்துக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த படுகொலையும், கொலை முயற்சியும் கண்டிக்கத்தக்கவை. அதேபோல், மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் ஆறுமுகம் என்பவர் நடத்தி வந்த இனிப்புக்கடையை திமுகவைச் சேர்ந்த நகராட்சி உறுப்பினர் காசி பாண்டியன் என்பவர் தலைமையிலான கும்பல் தாக்கி சூறையாடியுள்ளது.
சென்னை, மதுரை என தமிழ்நாடு முழுவதும் வணிகர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவது கவலையளிக்கிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சட்டம் - ஒழுங்கு சீர்குலையும் என்பது தான் எழுதப்படாத வரலாறாக உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் தான் சென்னையில் பெண் வணிகர் வெட்டிக்கொல்லப்பட்ட நிகழ்வும், மதுரை திருமங்கலத்தில் திமுக நகராட்சி உறுப்பினரால் கடை சூறையாடப்பட்ட நிகழ்வும் அரங்கேறியுள்ளன.
இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டியது தான் காவல்துறையின் பணியாகும். ஆனால், காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை விட திமுகவினரும், அவர்களின் கூட்டணி கட்சியினரும் செய்யும் குற்றங்களை மூடி மறைப்பதில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.
ஒரு மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படாவிட்டால், அந்த மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படாது. தமிழ்நாட்டையும் அப்படி ஒரு மோசமான நிலைக்கு திராவிட மாடல் அரசு தள்ளிவிடக்கூடாது. தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னை திருவொற்றியூரில் மாமுல் தர மறுத்த பெண் வியாபாரி ரவுடியால் கொடூரக் கொலை - ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத்தவறிய தமிழக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் பெண் பழ வியாபாரியை மாமுல் தர மறுத்ததாக கூறி கொடூரமாக கொலை செய்த ரவுடி, அதனை தடுக்க முயன்ற பெண்ணின் கணவரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அதிகரித்துவரும் ரவுடிகள் கலாச்சாரத்தையும், கூலிப்படையையும் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் தொடங்கி அனைத்து தரப்பினரின் உயிர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி நிகழும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் அதனை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காத அரசு நிர்வாகத்தின் மீதும், காவல்துறையின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சற்று நேரத்திற்கு முன்பாக கூட சென்னை கிண்டியில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் இருவரை கத்தியால் குத்திவிட்டு அடையாளம் தெரியாத கும்பல் தப்பியோடிய சம்பவமும் நடந்தேறியுள்ளது.
எனவே, இனியாவது காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை களைய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.











Click it and Unblock the Notifications