மேகதாது அணை விவகாரம்: தமிழகத்துக்கு துரோகம் செய்யாதீர்கள்.. மத்திய அரசை கடுமையாக சாடிய ராமதாஸ்!
சென்னை: தமிழகத்தில் ஒப்புதல் இல்லாமல் தயாரிக்கப்பட்ட மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கையைக் கர்நாடகத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்க ஏற்பாடு செய்வதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் உறுதியளித்திருப்பதாக, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவல் உண்மையாக இருந்தால் அது கண்டிக்கத்தக்கது.

பசவராஜ் பொம்மை
மேகதாது அணையை எப்படியாவது கட்டியே தீர வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நேற்று டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தைச் சந்தித்துப் பேசியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொம்மை, 'காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் அடுத்த கூட்டத்தின் விவாதத்துக்கான பொருட்களில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையையும் சேர்ப்பதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத் என்னிடம் உறுதியளித்தார்' என்று கூறினார்.

விரிவான திட்ட அறிக்கை
தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதிப்பது சாத்தியமே இல்லை என்னும் சூழலில், இத்தகைய வாக்குறுதியை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அளித்திருப்பது தவறு; அதை ஏற்க முடியாது.மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ம் ஆண்டில் மத்திய அரசு அனுமதி அளித்ததில் இருந்தே, இந்த விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் இதுகுறித்து விவாதிப்பதற்கான முயற்சிகளைக் கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதுதான் வாடிக்கை
03.12.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்து பிரச்சினை எழுப்ப கர்நாடக அரசின் பிரதிநிதிகள் முயன்ற நிலையில், தமிழக அரசு அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மேகதாது குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையம் மறுத்துவிட்டது.அதன்பின், ஒவ்வொரு கூட்டத்திலும் மேகதாது அணை குறித்து கர்நாடகம் விவாதிக்க முயல்வதும், தமிழகத்தின் எதிர்ப்பால் அது கைவிடப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

மத்திய அரசு பரிசீலிக்காது
இத்தகைய சூழலில், மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்துக்கான விவாதப் பொருளில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைச் சேர்ப்பது நிச்சயமாக கர்நாடகத்துக்கு ஆதரவான செயலாகும். இத்தகைய ஒரு சார்பு நடவடிக்கைகளில் மத்திய அரசோ, மத்திய அமைச்சரோ ஒருபோதும் ஈடுபடக் கூடாது.
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். கடைமடை மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், கர்நாடகம் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்தால் அதை மத்திய அரசு பரிசீலிக்காது;

திருப்பி அனுப்ப வேண்டும்
அதை கர்நாடகத்துக்கே திருப்பி அனுப்பிவிடும் என்பதுதான் பாமகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், அப்போதைய மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸுக்கு 2015ஆம் ஆண்டில் எழுதிய கடிதத்தின் மையக்கரு ஆகும். அதுமட்டுமின்றி, சிவசமுத்திரம் திட்டத்துக்காக, 2014ஆம் ஆண்டு கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பிவிட்டது என்றும் உமாபாரதி கூறியிருந்தார். அதுதான் மிகவும் சரியான நடவடிக்கை. அதே நடைமுறையைப் பின்பற்றி, தமிழகத்தின் இசைவு பெறாமல் தாக்கல் செய்யப்பட்ட மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையையும் மத்திய அரசு திருப்பி அனுப்பியிருக்க வேண்டும்.

தமிழகத்துக்கு துரோகம்
அதுவும் மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டதே தவறு என்று மத்திய அரசே ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில், திருப்பி அனுப்புவதுதான் சரியான செயலாக இருக்க முடியும்.
அதை விடுத்து, முறைகேடான வழியில் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள மத்திய அரசே ஏற்பாடு செய்வது தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

மத்திய அரசு சேர்க்க கூடாது
மேகதாது அணை விவகாரத்தில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாகச் செயல்பட வேண்டிய மத்திய அரசு ஒரு மாநிலத்துக்கு சாதகமாகச் செயல்படக் கூடாது. எனவே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்துக்கான விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரத்தை மத்திய அரசு சேர்க்கக் கூடாது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் ஒப்புதல் இல்லாமல் தயாரிக்கப்பட்ட மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கையைக் கர்நாடகத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications