கிராமம் கிராமமாக பாமக! தந்தையின் ‘திட்டத்தை’ கையிலெடுத்த தனயன்! அன்புமணியை உருக வைத்த ’குடும்ப கதை’!
சென்னை : கிராமங்களை நோக்கி, பயணத்தை தொடங்கியிருக்கும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்க்கு முதல் கட்ட சுற்று பயணமே மகிழ்ச்சிகரமான மறக்க முடியாத பயணமாக அமைந்திருக்கிறது என சிலாகித்து பேசி வருகின்றனர் பட்டாளி மக்கள் கட்சியினர். அவ்வாறு நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்..
பாமக தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் கடந்த ஜூலை 9 ஆம் தேதி முதல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் 60 இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
கட்சியின் இளைஞரணி தலைவராக இருக்கும் பொழுதே கட்சியை பலப்படுத்தும் நோக்கில், கிராமங்களை நோக்கி செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்து திட்டங்களை வகுத்த பொழுது, கொரோனா ஊரடங்கு வந்தது இடையூறாக நின்று தடைப்பட்டது.

அன்புமணி ராமதாஸ்
தற்பொழுது கட்சியின் தலைவராக பொறுப்பேற்றவுடன், கிராமங்களை நோக்கி செல்லும் பயணத்திட்டமானது செயலுக்கு வந்துள்ளது. முதல் பயணமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் 60 கிராமங்களை தேர்ந்தெடுத்து கொடியேற்றுவதற்கு பயணத்தை தொடங்கினார் அன்புமணி. திருத்தணி முருகனை வழிபட்டு பயணத்தை தொடங்கிய அவருக்கு, செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்திலும் நள்ளிரவை தாண்டியும் மக்கள் கூட்டம் சிறிதளவும் கலைந்து செல்லாமல் அவருக்காக காத்திருந்தது, அவருக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

உற்சாகம்
ஒவ்வொரு இடங்களிலும் அவரை வரவேற்ற விதம் அவரை பூரிப்படைய செய்துள்ளது எனவும், இரண்டாவது கட்ட சுற்றுப் பயணத்திலும் அவருக்கு செல்லும் இடமெல்லாம் இளைஞர், பெண்கள், சிறுவர்கள் என கூட்டம் நிரம்பி வழிந்து வருவதாக சிலாக்கித்துப் பேசுகின்றனர் பாட்டாளிகள். செல்லும் இடமெல்லாம் அவர் வாகனத்தின் மீது மலர் மழையாக பொழிந்த மக்கள், கிரேன்களின் உதவியுடன் ராட்சத மலர் மாலைகளை அணிவித்தும், வண்டிகளில் உதிரிப்பூக்களை நிரப்பிக்கொண்டு, வழி முழுவதும் தூவிச்சென்றும், பெண்கள் எல்லாம் ஆரத்தி எடுத்தும் வரவேற்று மகிழ்ந்தார்கள். மேலும் ஒவ்வொரு ஊரிலும் பெண்கள் அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டு, அவரிடம் கைகுலுக்கி பேசுவதில் ஆர்வமாக இருந்தனர்.

மக்களுடன் சந்திப்பு
நேரம் கடந்தாலும், திட்டமிட்ட அனைத்து ஊர்களுக்கும் சென்று, காத்திருக்கும் மக்களை சந்தித்தார்.
நள்ளிரவை கடந்த போதிலும், திட்டமிடப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்ற பிறகு தான், முதல் நாள் பயணத்தை நிறைவு செய்தார். அறைக்கு திரும்பவே இரவு இரண்டரை மணி ஆன போதும், முதல் நாள் வரவேற்பில் கிடைத்த, உற்சாகத்தில் இரண்டாவது நாள் பயணத்தை திட்டமிட்டபடி தொடங்கிய அன்புமணிக்கு பல இடங்களில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சுற்றுப்பயணத்தின் போது சுவாரசியமான சந்திப்பு ஒன்று நடந்தது, அன்புமணியை நெகிழச் செய்தது.

பேத்தியோடு வந்த தாத்தா
1980களில் ராமதாஸ் கிராமங்கள் தோறும் சென்ற பொழுது, தன் மகளை சிறுமியாக அழைத்து வந்த ஒருவர், தற்பொழுது நாற்பது வருடங்களுக்கு பிறகு அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அன்று சிறுமியாக அழைத்து வந்த தனது மகளுடன், தனது மகளின் மகளான பெயர்த்தியையும் அழைத்து வந்து, "டாக்டர் அய்யா வந்தபோது, என் மகளோடு வந்து சந்தித்தேன் தம்பி, இன்று என் மகளோடும், என் மகளின் மகளோடும் வந்து சந்திக்கிறேன் தம்பி" என்று முதியவர் கூற, அந்த தருணம் உணர்ச்சிகள் நிறைந்த தருணமாக மாறி, நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

சுற்றுப்பயணம்
1980களில் வன்னியர் சங்கத்தினை பலப்படுத்த ராமதாஸ் ஒவ்வொரு கிராமமாக சென்று வன்னியர் சங்கத்தினை பலப்படுத்தினார். வட மாவடங்களில் அவர் காலடி படாத கிராமமே இல்லை என்ற அளவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்பொழுது ஏற்பட்ட எழுச்சி தான், பாட்டாளி மக்கள் கட்சியை அசைக்க முடியாத கட்சியாக தற்பொழுது வரையும் வைத்திருக்கிறது. அதே பாணியில், தற்பொழுது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் பயணமானது, மிகுந்த வரவேற்பையும் மிகப்பெரிய எழுச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது என்கின்றனர் பாட்டாளிகள்.












Click it and Unblock the Notifications