விடாப்பிடி ராமதாஸ்.. விட்டுக் கொடுத்த அன்புமணி! ஆனால் ஏன் பிடிவாதம்? சோக முகத்துடன் ’தூது’ புறாக்கள்
சென்னை: பாமகவின் தந்தை மகன் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. பொது மேடையில் அன்புமணி மன்னிப்பு கேட்டும் விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறார் ராமதாஸ். மாவட்டம் தோறும் அன்புமணி நடத்தும் பொதுக்கூட்டத்துக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியவர்களே தற்போது அதிருப்தியில் இருக்கின்றனர். பதவியை விட்டுத்தர மாட்டேன் என ராமதாஸ் கூறி வருவதால், அடுத்து என்ன செய்யப் போகிறார் அன்புமணி என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
தமிழகத்தின் நீண்ட நெடிய வரலாறு கொண்ட கட்சிகளில் ஒன்று பாட்டாளி மக்கள் கட்சி. வன்னியர் சங்கமாக இருந்த இயக்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக்கி தேர்தல் அரசியலுக்கு கொண்டு வந்தவர் ராமதாஸ். பல எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மத்திய அமைச்சர்களை உருவாக்கிய கட்சி.
தொடர்ந்து கட்சியின் தலைவராக ஜிகே மணி செயல்பட்டு வந்த நிலையில், எதிர்கால நலன் கருதி அன்புமணியை கட்சியின் தலைவர் ஆக்கினார் ராமதாஸ். தந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பாமக. அதன் பயனாக பல ஆண்டுகளுக்கு பிறகு பாமகவுக்கு எம்எல்ஏக்கள் கிடைத்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையில் மோதல் நிலவுகிறது. மோதலுக்கு உண்மையான காரணம் என்ன என்பதே பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு தெரியவில்லை. தலைவர் பதவி, இளைஞர் அணி தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக அன்புமணி ராமதாஸுக்கு சிலர் எதிராக செயல்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால் பிரச்சனைக்குரியதாக சொல்லப்படும் ஜிகே மணி, முகுந்தன் உள்ளிட்டோர், அன்புமணி ராமதாஸ் உடைய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் முகுந்தனின் தாயாரான காந்திமதியும் மகனுக்கு பதவி வேண்டாம், பிரச்சனையை முடித்தால் போதும் என ராமதாஸ் - அன்புமணியிடம் பேசியதாக சொல்லப்படுகிறது. இப்படியாக நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கும் நிலையில் மேடையில் மன்னிப்பு கேட்டார் அன்புமணி ராமதாஸ். தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒன்றும் தவறில்லை.. உத்தரவிடுங்கள் தலைவராக எதுவாக இருந்தாலும் செய்து முடிக்கிறேன் எனக் கூறினார் அன்புமணி ராமதாஸ். அவரே இறங்கி வந்து விட்ட நிலையில் தந்தையான ராமதாஸ் இறங்கி வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்ப்புக்கு நேர் மாறாக அடுத்த நாளே பல நிர்வாகிகளை நீக்கினார் ராமதாஸ். இதனால் அவர் தொடர்ந்து பிடிவாதத்தோடு நடந்து கொள்வதாக கட்சியினரே விமர்சிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸை சந்தித்து பேசினர். அன்புமணி உடன் இணக்கமாக செல்ல வேண்டும் என அவர்கள் எடுத்துச் சொன்ன போதிலும், 40 ஆண்டு காலம் வன்னியர் சங்கத்துக்காகவும் கட்சிக்காகவும் தான் உழைத்ததை சுட்டிக்காட்டிய ராமதாஸ், தலைவர் பதவியை நான் தான் வைத்திருப்பேன் விருப்பப்படும் போது தான் அன்புமணிக்கு அளிப்பேன் என சொன்னாராம்.
எவ்வளவோ சொல்லியும் ராமதாஸ் அன்புமணியை மீண்டும் தலைவராக நியமிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். குடும்பத்திலும் பிரச்சினை இல்லை, கட்சியிலும் பிரச்சனை இல்லை என்றால் ராமராஸ் இப்படி பிடிவாதமாக நடந்து கொள்வதற்கு காரணம் யார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏற்கனவே ராமதாஸ் வீட்டில் இருக்கும் ஒரு செவிலியர் தான் பிரச்சனைக்கு காரணம் என சொல்லப்படும் நிலையில் அது தொடர்பாக பாமக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கவில்லை.
இது ஒரு புறம் இருக்க தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார் அன்புமணி. ஏற்கனவே ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுவை நடத்தி வரும் நிலையில் அன்புமணி ராமதாஸுக்கு பின்னால் ஏராளமான நிர்வாகிகள் அணிவகுத்து நிற்கின்றனர். இதனால் தான் அவர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிப்பதாக ராமதாஸ் சொல்லி வருகிறார். இதற்கிடையே அன்புமணி நடை பயணம் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் பாமகவில் பல்வேறு பரபரப்புகள் அரங்கேறும் என்கின்றனர் அக்கட்சியின் விவகாரங்களை உன்னிப்பாக கவனிக்கும் நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications