"அன்பு".. அதாங்க எல்லாம்.. இயேசு அதைதான் போதித்தார்! அன்புமணியின் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்து
சென்னை: அன்பை போதித்த இயேசுபிரானின் கொள்கையை பின்பற்றி உலகம் முழுவதும் அன்பை பரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கிறித்துமஸ் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு உள்ளார்.
நாளை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கிறிஸ்துவ மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு இருக்கும் வாழ்த்து செய்தியில், "மன்னிப்பே மனித வாழ்வின் சிறந்த குணம் என்பதை போதித்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் இயேசு பிரான் அன்பு காட்டினார்.

உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். தமது வாழ்நாளின் கடைசி நொடி வரை அன்பையும், கருணையையும் காட்டியது மட்டுமின்றி, எதிரிகளுக்கு மன்னிப்பையும் வழங்கினார். இன்றைய உலகிற்கு தேவை பொருளாதார வலிமையோ, படைபலமோ அல்ல.
மாறாக அவற்றை விட மிகவும் சக்தி வாய்ந்த அன்பு , கருணை, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை ஆகியவை தான். அன்பால் மட்டும் தான் உலகை வெல்ல முடியும்; பண பலத்தாலோ, படை பலத்தாலோ உலகை வெல்ல முடியாது என்பதற்கு இன்றைய உலகின் நிகழ்வுகள் தான் அசைக்க முடியாத எடுத்துக்காட்டு. இயேசுவின் கொள்கைகளும், போதனைகளும் தான் உலகம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஆகும். இயேசுவின் கொள்கைகள் மட்டுமின்றி அவற்றை பின்பற்றுவோரும் வெற்றி பெறுவது உறுதி.
எனவே, இந்த உலகில் பொருள் படைத்தவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை வாரி வழங்குவோம். பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம். அதன் மூலம் இயேசு விரும்பிய அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் பெருகுவதற்காக உழைக்க உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை கிறித்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications