இணையும் கைகள்.. பாமகவில் முடிவுக்கு வந்த மோதல்! பஞ்சாயத்தை கூட்டியதே ‘இந்த’ கட்சி தானா? பரபர பின்னணி
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவி வந்த மோதல் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்கிறது. தந்தையும் கட்சியின் நிறுவனருமான ராமதாஸை சந்தித்துள்ளார் அன்புமணி ராமதாஸ். இந்த நிலையில் திமுகவுடன் தொடர்பில் இருக்கும் சில நிர்வாகிகள் தான் இவ்வளவு நாளாக நிலவி வந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர் வட மாவட்ட பாமக நிர்வாகிகள்.
2021 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தயாராகி வருகிறது. திமுக கூட்டணி ஏற்கனவே 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரம் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக நிச்சயம் வென்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் களமிறங்குகிறது.
இதுவரை அடுத்தடுத்து இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக தோற்றதில்லை என்ற வரலாற்றை தக்க வைக்க எடப்பாடி பழனிச்சாமி போராடி வருகிறார். இதனால் கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. திமுக கூட்டணியில் சிலசில சலசலப்புகள் இருந்தாலும் அந்த கூட்டணியில் இருந்து வெளிவருவதற்கு எந்த கட்சியும் தயாராக இல்லை என்பதையே தற்போதைய சூழல்கள் காட்டுகின்றன.

2026 தேர்தல்
அதே நேரத்தில் அதிமுகவில், பாஜக தவிர வேறு எந்த கட்சியும் அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இருக்கிறோம் என அறிவிக்கவில்லை. இதை அடுத்து தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வர எடப்பாடி பழனிச்சாமி திட்டம் தீட்டியுள்ளார். இந்த நிலையில் பாமகவில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் அது முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் நிறுவனரான ராமதாஸ் உடன் அன்புமணி ராமதாசுடன் மோதல் போக்கை கையாண்டு வந்தார்.
அன்புமணி ராமதாஸ்
கட்சியின் நிகழ்ச்சிகளில் அன்புமணி ராமதாஸை நேரடியாகவும் சில நேரங்களில் மறைமுகமாகவும் ராமதாஸ் விமர்சித்து பேசினார். உச்சபட்ச மோதலாக பல லட்சம் பேர் திரண்டு இருந்த வன்னியர் சங்க மாநாட்டில் கட்சிக்குள் கூட்டணி வேண்டாம்.. இங்கே நடக்காது தம்பி என ராமதாஸ் பேசியது, சொந்த கட்சி நிர்வாகிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பின்போது குடும்ப விவகாரங்களை பொதுவெளியில் பேசி அதிர வைத்தார் ராமதாஸ்.
ராமதாஸ்
மேலும் பாமக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட 36 பேரை நீக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அவர்கள் அனைவரும் பதவியில் தொடர்வதாக மறு அறிவிப்பு வெளியிட்டார் அன்புமணி. இப்படியாக பரபரப்பான சூழல்கள் நடந்தேறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று அன்புமணி ராமதாஸ் ராமதாஸ் சந்திப்பு நடந்துள்ளது.
திமுக
தைலாபுரத்தில் நடந்த சந்திப்பு காரணமாக இன்று முதல் முடிவுக்கு வரும் என்கின்றனர். இது ஒரு புறம் இருக்க பாமக மோதலின் பின்னணியில், ஜிகே மணி இருப்பதாகவும், தைலாபுரத்தில் இருக்கும் ஒரு பெண் செவிலியர் தான் காரணம் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக பாமக மோதலுக்கு மூல காரணமே திமுக தான் என்கின்றனர் நம்மிடம் பேசிய பாமக நிர்வாகிகள். இது தொடர்பாக பேசிய அவர்கள்," திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில் அதிமுக கூட்டணி வலுவாக இருக்கக் கூடாது என நினைக்கிறது திமுக தலைமை. இதனால் ஜிகே மணி உள்ளிட்ட சில நிர்வாகிகளை தூண்டிவிட்டு பிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளனர்.
ஜிகே மணி
கடந்த காலங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய ஜிகே மணி சட்டமன்றத்தில் கலைஞர் புகழ் பாடியது, பல்கலைக்கழகத்திற்கு அவர் பெயர் வைக்க வேண்டுமென தீர்மானத்தில் பேசியது என திமுக ஆதரவாளராகவே அவர் மாறிவிட்டார். அதிமுக கூட்டணிக்கு பாமக செல்லக்கூடாது என்பதற்காக பாமகவுக்குள் இருக்கும் நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்து பேச வைத்திருக்கிறது திமுக. மேலும் பொதுவெளியில் பாமக உட்கட்சி விவகாரங்களை பரபரப்பாகியதும் திமுக தான். இப்படி பிரச்சினைகள் வலுத்த நிலையில் தான் ராமதாசுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் நெருக்கமான நிர்வாகிகள் இருவரையும் சந்தித்து நடந்துவற்றை எடுத்துக் கூறினர்.
அதிமுக
நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு தற்போது இருவரது சந்திப்பும் நடந்துள்ளது. ஆனாலும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவது விவகாரங்களில் அதிமுகவும் கறார் காட்டுவதால் தற்போதைக்கு கூட்டணி குறித்த எந்த நிலைப்பாட்டையும் அன்புமணி ராமதாஸ் எடுக்கவில்லை. விரைவில் அது தொடர்பான பேச்சு வார்த்தைகளும் தொடங்கப்படும்" என்கின்றனர்.












Click it and Unblock the Notifications