காவிரி அனைத்து கட்சி கூட்டத்துக்கு துரைமுருகன் தலைமையா? முதல்வர் ஒதுங்குவதை ஏற்க முடியாது: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் தலைமை ஏற்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் நாளை நடைபெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் டாக்டர் ராமதாஸ் இதனை வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டிருந்த அறிக்கையில், காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையினையும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பினையும், செயல்படுத்த, CWMA மற்றும் CWRC ஆகிய அமைப்புகளை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 2018 ஆம் ஆண்டு ஜூன் முதல் இவ்வமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீர்ப்புகளின் படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடி நீரைப் பெற்றது.

cauvery tamilnadu

கர்நாடகா நீர் இருப்பு: இன்றைய அளவில் (15.07.2024) கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி. ஆகும். மேலும், IMD யின் அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் உள்ளது. இந்தச் சூழலில், CWRC அமைப்பின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்: இவ்வாறு, தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது. காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாளை (16.07.2024) காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளேன். இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

முதல்வர் ஒதுங்குவதா?: ஆனால் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் இத்தகைய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தலைமை ஏற்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 8000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்தக் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பங்கேற்காமல் ஒதுங்கியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கர்நாடகா அனைத்துக் கட்சிக் கூட்டம்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கக் கூடிய, காவிரியில் தமிழகத்தின் உரிமையை பறிக்கக் கூடிய செயலை செய்வதற்கான கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையே அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையேற்று நடத்துகிறார். அனைத்துக் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உழவர் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டவர்களை அழைத்து கலந்தாய்வு நடத்துகிறார்.

முதல்வர் தலைமையில்தான் கூட்டம்: அதேபோல், தமிழ்நாட்டிலும் காவிரி பிரச்சினை குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றால் தான் அதற்கு முக்கியத்துவம் கிடைக்கும். காவிரி பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடத்தபட்டால் தான் காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடகத்திற்கும் மற்றவர்களுக்கும் காட்ட முடியும்.

எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடியை காப்பாற்ற வேண்டும்; தமிழகத்தின் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும் போன்ற நோக்கங்களைக் கருத்தில் கொண்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையேற்று நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+