பாயாசத்தில் பாய்சன் கலந்து பாட்டிக்கு ஊட்டிய 14 வயது சிறுமி.. சென்னையை அதிர விட்ட 10 சவரன் தங்க நகை
சென்னை: சென்னை அயனாவரம் பாட்டியிடம், பாயாசம் செய்து தரட்டுமா என்று கேட்கவும், அதற்கு பாட்டி சம்மதித்துள்ளார்.. அப்போதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. தாயின் கொடூர புத்தியால் 14 வயது சிறுமியின் வாழ்க்கையும் சேர்ந்து நாசமாகி உள்ளது.. இது குறித்த விசாரணையை அயனாவரம் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
அயனாவரத்தில் தன்னுடைய சொந்த வீட்டில் மமலாபி (75) என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார்.. இவரது பிள்ளைகள் திருமணமாகி வெளியூர்களில் உள்ளனர்.

பாட்டிக்கு பாய்சன் பாயாசம்
மமலாபி மேல் தளத்தில் வசிக்கும் நிலையில் , வீட்டின் கீழ் தளத்தை பத்ருன்னிஷா பேகம் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். பத்ருன்னிஷாவுக்கு 50 வயதாகிறது.. இந்த பெண்ணுக்கு 14 வயது மகள் உள்ளார்.. இந்த தாயும், மகளும் அடிக்கடி பாட்டி வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
சம்பவத்தன்று இரவு 14 வயது சிறுமி பாட்டியின் வீட்டிற்கு வந்துள்ளார்.. அங்கேயே சிறிது நேரம் விளையாடி கொண்டிருந்தாராம்.. பிறகு பாட்டியிடம், உங்களுக்கு பாயாசம் செய்து தரவா? என்று கேட்டாராம்..
நீ ஆசையாக கேட்பதால் கொஞ்சமாக செய்து கொடு என பாட்டி சொன்னாராம்.. இதையடுத்து சிறுமியும், பாட்டியின் வீட்டிலேயே பாயாசம் செய்துள்ளார்.. பிறகு கையோடு கொண்டு வந்திருந்த தூக்க மாத்திரையை பாயாசத்தில் கலந்து பாட்டிக்கு தந்திருக்கிறார் சிறுமி..
மாத்திரை பாயாசம் தந்த சிறுமி
சிறுமி ஆசையாக செய்த பாயாசம் என்பதால், பாட்டியும் அதை வாங்கி குடித்துவிட்டு, சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். மறுநாள் காலையில் கண்விழித்தபோதுதான், கழுத்தில் அணிந்திருந்த நகைகளை காணாமல் அதிர்ச்சி அடைந்துள்ளார்..
பாயாசம் குடித்ததுமே மயங்கிவிட்டதால், பத்ருன்னிஷா பேகத்திடமும், சிறுமியிடமும் கேட்டுள்ளார்.. அதற்கு அவர்கள் நகைகளை பற்றி எதுவுமே தெரியாது என்று சொல்லி உள்ளனர்..
இதனால் சந்தேகம் அடைந்த பாட்டி மமலாபி, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசாரும் இதுகுறித்த விசாரணையை நடத்தினார்கள்.. புகாரின் அடிப்படையில் போலீஸார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த தாய் மற்றும் மகளை அடையாளம் கண்டனர்.
மேலும், கடைசியாக பாட்டியின் வீட்டுக்கு வந்ததும், பாயாசம் தந்ததும் தாய், மகள் என்பதால், அவர்களை பிடித்து விசாரித்தனர்.
10 சவரன் நகை
விசாரணையில் அவர்கள் இருவருமே குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதற்கெல்லாம் காரணமாக பத்ருன்னிஷா பேகம் இருந்துள்ளார்.. இவருக்கு குடும்பத்தில் சில கடன்கள் இருந்ததாம்.. அந்த கடனை அடைக்க வழி தெரியாமல் இருந்தபோதுதான், பாட்டி அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் வீட்டில் வைத்திருந்த மற்ற நகைகளும் நினைவுக்கு வந்துள்ளது..
அதாவது 10 சவரன் நகைகளை பாட்டி உடலில் அணிந்திருப்பாராம்.. இதுதான் பத்ருன்னிஷா பேகம் கண்ணை உறுத்தி உள்ளது.. இதற்கு பிறகே 14 வயது மகளிடம் விஷயத்தை சொல்லி, பாயாசம் வைத்து, அதில் மாத்திரையை கலந்து தரும்படி ஐடியா தந்துள்ளார்..
அம்மாவிடம் தந்த தங்க நகை
பாட்டி பாயாசம் குடித்து மயங்கியதுமே அவரது கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கழட்டி கொண்டு வந்து தன்னுடைய அம்மாவிடம் தந்தாராம் சிறுமி.. உடனே அந்த நகைகளை அடகு வைத்து, உடனடி கடனை பத்ருன்னிஷா பேகம் தீர்த்துள்ளார்.. மிச்சம் ஒன்றரை லட்சம் ரூபாயை கையில் ரொக்கமாக வைத்திருக்கிறார்..
தற்போது அந்த பணமும், திருடப்பட்ட நகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. திருடிய நகைகளின் மதிப்பு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் என்கிறார்கள்..
போலீசார் அறிவுறுத்தல்
பாட்டிக்கு திட்டமிட்டு மயக்க மாத்திரை கொடுத்து நகை திருடிய குற்றத்திற்காக இருவரையும் போலீசார் கைது செய்தனர்... பத்ருன்னிஷா பேகம் ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது மகள் சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறிவைத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், அறிமுகமானவர்களாக இருந்தாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.. முன்பின் தெரியாதவர்களிடமோ அல்லது அதிக பழக்கம் இல்லாதவர்களிடமோ விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications