திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை குற்றவாளி குறித்து தகவல் சொன்னால் ரூ.5 லட்சம்.. போலீசார் அறிவிப்பு
சென்னை: திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கத்தில் கடந்த 12 ஆம் தேதி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று சந்தேக நபர் குறித்த புகைப்படம் வீடியோக்களை வெளியிட்டிருந்த போலீசார், தற்போது சந்தேக நபர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் தகவல் தரும் நபர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 9 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் தற்போது சந்தேகப்படும் நபரின் புகைப்படத்தை சுவரொட்டி மற்றும் நோட்டீஸாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அச்சிட்டுள்ளனர் காவல்துறையினர். மேலும், இந்த நபர் குறித்து தகவல் தெரிந்தால் 99520 60948 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூறுபவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும், அவர்கள் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சிறுமி வன்கொடுமை வழக்கு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த 12 ஆம் தேதி சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அந்த சிறுமியை பின் தொடர்ந்து நபர் ஒருவர் சென்றார். திடீரென அந்த நபர் பள்ளி மாணவியை அருகே உள்ள மாந்தோப்புக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து அந்த நபர் சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து சிறுமி அந்த நபரிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு சென்றார். பின்னர் நடந்தது பற்றி தனது பாட்டியிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து சிறுமி கூறியதை கண்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து சென்னை அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
சிறுமியை அந்த நபர் தூக்கிச்செல்லும் வீடியோ மற்றும் சென்னை புறநகர் மின்சார ரயிலில் அந்த நபர் செல்லும் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டு தேடி வந்தனர். எனினும் சம்பவம் நடந்து 9 நாட்கள் ஆகியும் அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் நேற்று சந்தேகப்படும் அந்த நபரின் புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை திருவள்ளூர் போலீசார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தது.
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலிய வன்கொடுமை வழக்கில் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டிருந்த திருவள்ளூர் மாவட்ட போலீசார், சந்தேக நபர் குறித்த அடையாளம் தெரிந்தவர்கள் 99520 60948 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தனர். மேலும் அந்த பதிவில் சந்தேக நபரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பதிவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இன்று வரை சந்தேக நபர் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காததால் போலீசார் புது முயற்சியை கையில் எடுத்துள்ளனர். அதாவது சந்தேக நபர் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சுவரொட்டி மற்றும் நோட்டீஸ் அச்சிட்டுள்ளனர். இதில், சந்தேக நபர் குறித்து புகைப்படங்கள் மற்றும் சந்தேக நபர் குறித்து தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும்.
மேலும் தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும். தகவல் தெரிந்தால் 99520 60948 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற வாசகங்கள் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக குற்றவாளி விரைவில் சிக்குவார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications