லொக்கேஷன் கன்பார்ம்.. டார்கெட் ரெடி.. சம்போ செந்திலை தட்டித் தூக்க ரெடியான போலீஸ்! பரபர தகவல்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சம்பவம் செந்தில் என்கிற சம்போ செந்திலின் இருப்பிடத்தை போலீசார் நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் சம்போ செந்திலின் இருப்பிடத்தை நெருங்கியுள்ள போலீசார், அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் தனது வீட்டிற்கு வெளியே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சிக்கிய ரௌடிகள்: இந்த கொலை வழக்கு தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த சீசிங் ராஜா கைது செய்யப்பட்டு அவரும் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி, ஹரிதரன், சதீஷ்குமார், ஹரிஹரன் சிவா, பிரதீப், முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை, முகிலன், விஜயகுமார் என்ற விஜய், விக்னேஷ் என்ற அப்பு, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியும், பிரபல ரௌடி நாகேந்திரன் மகனுமான அஸ்வத்தாமன், ராஜேஷ், செந்தில்குமார் மற்றும் கோபி உள்ளிட்ட 25 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏ1, ஏ2: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 28 பேரும் மீதும் செம்பியம் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 28 நபர்களோடு சேர்த்து தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் எதிரியாக அதாவது ஏ1 குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஏ2 குற்றவாளியாக, தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்தில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஏ 3 குற்றவாளியாக வழக்கறிஞர் அஸ்வத்தாமன் பெயரை காவல்துறையினர் சேர்த்துள்ளனர்.
இருப்பிடத்தை கண்டறிந்த போலீஸார்: இந்நிலையில், வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வரும் சம்பவம் செந்திலை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். சர்வதேச போலீஸ் உதவியுடன் சம்போ செந்திலுக்கு தமிழ்நாடு போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி இருந்தது. இந்நிலையில், அவரது இருப்பிடத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்போ செந்திலின் இருப்பிடத்தை நெருங்கியுள்ள போலீசார், அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
யார் இந்த சம்போ செந்தில்?: தூத்துக்குடியை சொந்த ஊராக கொண்ட செந்தில், சென்னையில் ரவுடியாக அறியப்பட்டவர். கடந்த 2020 ஆம் மார்ச் மாதம் காக்கா தோப்பு பாலாஜி மற்றும் ரவுடி சிடி மணி ஆகியோர் சென்ற கார் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் சம்போ செந்திலுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்ட ரவுடி சம்போ செந்தில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
ரவுடி சம்போ செந்தில், பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்பு உள்ளவர். வழக்கறிஞரான செந்தில், ரௌடிகளுக்கு ஆதரவாக ஆஜராகி வாதிட்டு வந்தவர். ஒருகட்டத்தில் அவரே ரவுடியாக ஃபார்ம் ஆனார். கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பதில் செந்தில் கில்லாடி என ரௌடிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதன் காரணமாக சம்பவம் செந்தில் என்று அழைக்கப்பட்டு வந்தவர், பேச்சுவழக்கில் சம்போ செந்தில் என்று ரவுடிகள் மத்தியில் அழைக்கப்படுகிறார்.
சமீபத்திய போட்டோ கூட இல்லை: கொலை வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான சம்போ செந்தில் கடந்த பல ஆண்டுகளாக போலீசாரின் கண்ணில் சிக்காமல் இருந்து வருகிறார். 6 ஆண்டுகளாக செந்திலை வலை வீசி தேடி வருகிறது தமிழ்நாடு போலீஸ். சம்போ செந்திலின் சமீபத்திய புகைப்படம் கூட யாரிடமும் இல்லை எனக் கூறப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்தபடியே, தமிழகத்தில் சம்போ செந்தில் கொலை திட்டங்களை தீட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. சம்போ செந்தில் நேபாளம், இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் மாறி, மாறி வசித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் ஸ்க்ராப் தொழிலில் சம்போ செந்தில் கேங் ஈடுபட்டுள்ளது. ஸ்கிராப் வர்த்தகத்தை கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டியில் ஆம்ஸ்ட்ராங் மீது சம்பவம் செந்திலுக்கு முன்பகை இருந்தது என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஸ்கிராப் பிசினஸ் தகராறு: ஸ்கிராப் பிசினஸில் சம்போ செந்திலுக்கு ஆம்ஸ்ட்ராங் இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் உடன் மோதல் உள்ள ரவுடிகளை ஒருங்கிணைத்து, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு சம்போ செந்தில், ரவுடி நாகேந்திரனுடன் இணைந்து ஸ்கெட்ச் போட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்போ செந்தில் பிடிபட்டால் தான் உண்மையான காரணம் தெரியவரும்.












Click it and Unblock the Notifications