திருமணத்துக்கு வரன் தேடும் பெண்களை குறிவைத்து மோசடி.. நைஜீரிய நாட்டு கும்பலை கைது செய்த போலீஸ்!
சென்னை: திருமணம் செய்வதாக கூறி பெண்களை குறி வைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த நைஜீரிய நாட்டு கும்பலை டெல்லியில் போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் திருமணத்துக்காக திருமண தகவல் இணையதளத்தில் வரன் தேடி உள்ளார்.
அதில் நெதர்லாந்தில் டாக்டராக பணியாற்றுவதாக சலீம் என்ற பெயரில் ஒரு வரனின் விவரங்கள் இருந்தன.
இடி மின்னலுடன் 9 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை அடி வெளுக்கும் - நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்
இதனை தொடர்ந்து வாட்ஸ்-அப் மூலம் சலீமிடம் அந்த பெண் பழகி வந்துள்ளார். ''உங்களுக்கு ஒரு அன்பு பரிசு அனுப்புகிறேன்'' என்று அந்த பெண்ணிடம் சலீம் கூறியுளளார்.

பரிசு வந்துள்ளது
அவர் கூறிய சில நாட்களில், சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் இருந்து பேசுவதாக கூறிய ஒருவர் ''லேப்டாப், வைர நகைகள் உள்ளிட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் உங்களுக்கு வந்திருக்கின்றன. முதலில் ரூ.50,000 செலுத்த வேண்டும். மீதமுள்ள வரி கட்டணத்தை செலுத்திவிட்டு பரிசு பொருட்களை பெற்று செல்லுங்கள்'' என்று கூறியுள்ளார். இதற்கு பணம் அனுப்ப வேண்டும் எனக்கூறி ஒரு வங்கி கணக்கு எண்ணையும் கொடுத்துள்ளார்.

பணம் பறிக்கும் கும்பல்
இதை உண்மை என நம்பிய அந்த பெண், முதலில் 40,000 ரூபாயையும், அடுத்ததாக ரூ.4 லட்சத்தையும் அந்த வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். மேலும் ரூ.2 லட்சம் அனுப்ப வேண்டும் என்று அந்த நபர் கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பெண், சென்னை மத்தியப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, இது திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் என்பதை கண்டுபிடித்தனர்.

ஆபரேஷன் டி
இதுபோல் பல்வேறு புகார்களும் வந்துள்ளதால், 'ஆபரேஷன் டி' என்ற பெயரில் இந்த கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பெரம்பூர் பெண்ணிடம் பேசிய நபரின் செல்போன் எண் , பணம் செலுத்திய வங்கி கணக்கு ஆகியவற்றை போலீசார் விசாரித்தபோது, சலீம் என்ற பெயரில் யாரும் இல்லை என்பதும், இந்த கும்பல் டெல்லியில் பதுங்கி இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

2 பேர் அதிரடி கைது
இதனை தொடர்ந்து உடனே டெல்லி விரைந்த போலீசார், உத்தம் நகரில் அவர்கள் தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது நைஜீரிய நாட்டை சேர்ந்த பாலினஸ் சிகேலுவோ(31), சிலிட்டஸ் இகே சுக்வு(23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் டெல்லியில் தங்கி இருந்து பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ள மற்றவர்களின் புகைப்படங்கள், தகவல்களை எடுத்து திருமண தகவல் இணையதளங்களில் போலியான பெயர்களில் பதிவு செய்து திருமணத்துக்காக பதிவு செய்யும் பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

போலீசார் எச்சரிக்கை
இந்த மோசடி கும்பலிடம் இருந்து மோசடி செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், லேப்டாப்புகள், ஏடிஎம் கார்டுகள், 4,30,000 ரொக்க பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். திருமணத்துக்காக திருமண தகவல் இணையதளங்களில் பதிவு செய்யும் பெண்கள் புகைப்படங்கள் மற்றும் அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை உண்மை என்று நம்பிக்கொண்டு தங்களது தனிப்பட்ட செல்போன் எண்ணை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம், பரிசு வந்துள்ளது என்று ஆசை காட்டினாலும் அதனை யாரும் நம்ப வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications