நாங்க ரொம்ப பயங்கரம்..ரயிலில் கத்தியுடன் ரகளை! மாஸ் காட்ட நினைத்து பீஸ் போன ’பிரசிடென்சி’ புள்ளீங்கோ
சென்னை : சென்னையில் ரயில்வே நடைமேடையில் கையில் பட்டாக்கத்தியை வைத்து உரசியபடி ரகளையில் ஈடுபட்ட பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், ஓடும் ரயில்களில் அட்டகாசம் செய்தால் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் தங்களது கால்களை தரையில் தேய்த்தபடியும் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பொதுமக்கள் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
மேலும் மாணவர்கள் ரயிலிலும், பேருந்திலும் படியில் தொங்கியபடி சாகசம் செய்வதாகக் கூறி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்தது.

மாணவர்கள் அத்துமீறல்
இதுகுறித்து, பேருந்து, ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கூறினாலும், ஆசிரியர்கள் கூறினாலும் அதைப் பொருட்படுத்தாமல் சில மாணவர்கள் நடந்து வருகின்றனர். குறிப்பாக தலைநகரான சென்னையில் கைகளை கத்திகளுடன் பேருந்துகளிலும் ரயில் நிலையங்களிலும் மாஸ் காட்டுவதாக நினைத்து அட்டகாசம் செய்து வரும் மாணவர்களின் அத்துமீறலால் பயணிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே சென்னையில் ரூட்டு தல பிரச்சனை காரணமாக மோதல்கள் நடைபெற்று வருகிறது.

பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி சென்ற மின்சார ரயிலில் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கூட்டமாக ஏரி உள்ளனர். ரயிலில் சிறிது நேரம் அமைதியாக பயணம் செய்த அவர்கள் பின்னர் தங்கள் சேட்டைகளை தொடங்கியுள்ளனர். படிக்கட்டில் தொங்கிக் கொண்டும் பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் ரயில் பெட்டிகளில் நடனமாடியபடி வந்த அவர்கள் தங்கள் கைகளில் பெரிய அளவிலான பட்டாக்கத்திகளை வைத்துக்கொண்டு நடைமேடைகளில் உரசியபடி சென்றனர்.

மக்கள் அதிர்ச்சி
கல்லூரி மாணவர்கள் இப்படி ரவுடிகள் போல் செயல்படுவதை பார்த்த மக்கள் அச்சத்தில் உறைந்த நிலையில் சென்னை ரயில்வே போலீசாருக்கும் புகார்கள் பறந்தன. மேலும் இந்த அட்டகாசங்களை வீடியோவாக எடுத்து அந்த மாணவர்களே சமூக வலைதளங்களிலும் பதிவு செய்த நிலையில் இந்த வீடியோ பதிவுகளின் அடிப்படையில் ரயில்வே காவல் மாவட்ட கண்காணிப்பாளர் உமா மற்றும் அதிவீரபாண்டியன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த இருவரையும் பொன்னேரி கீழப்பாக்கத்தைச் சேர்ந்த அருள் என்ற மாணவனையும் போலீசார் கைது செய்தனர்.

அதிரடி கைது
அவர்களிடமிருந்து பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஒருவர் சிறையிலும் மற்ற இருவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் ரயில்களில் பயணிக்கும் மாணவர்கள் கண்ணியமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் ரயில்களில் இதுபோல தொல்லைகள் செய்யும் ஆபத்தான மாணவர்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications