திருச்சி டூ தாம்பரம்.. ஆம்னி பஸ்ஸில் இப்படி எல்லாம.. அதிர்ந்த அந்தமான் தம்பதி.. சிக்கிய டிரைவர்
சென்னை: திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு ஆம்னி பஸ்ஸில் அந்தமானைச் சேர்ந்த தம்பதி வந்துள்ளனர். அவர்களுக்கு நடந்த கசப்பான அனுபவம் பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
சென்னையில் இருந்தும் திருச்சிக்கு தினசரி ஏராளமான ஆம்னி பேருந்துகள் செல்கின்றன. இதேபோல், கோவை,மதுரை, சேலம், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சை, சேலம், பெங்களூர் உள்பட பல்வேறு ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகள் இரு மார்க்கமாக செல்கின்றன.

இந்நிலையில் அந்தமானில் இருந்து மகளுடன் வந்த தம்பதி, திருச்சி கல்லூரியில் மகளை சேர்த்துவிட்டு, தாம்பரத்திற்கு வந்தனர். அவர்கள் வந்த ஆம்னி பஸ்சில் 10 பவுன் தங்க நகையை தவற விட்டனர். அதை எடுத்து மறைத்து வைத்து நாடகமாடிய டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
அந்தமானை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி சந்தியா . இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.. அவரை திருச்சியில் உள்ள இந்திரா கல்லூரியில் பி.காம். படிப்பில் சேர்க்க தமிழகம் வந்தனர். மகளை கல்லூரியில் சேர்த்து விட்டு ஹாஸ்டலில் தங்க ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து திருச்சியில் இருந்து தனியார் ஆம்னி பஸ்சில் நேற்று காலை தாம்பரம் புறப்பட்டு வந்தனர். சென்னை தாம்பரம் பஸ் நிலையம் வந்ததும் தாங்கள் கொண்டு வந்த பையை மறந்து இருவரும் இறங்கிவிட்டார்கள்.
அங்கிருந்து பஸ் புறப்பட்ட சற்று நேரத்தில், பையை தவறவிட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.. அந்த பையில் 10 பவுன் நகை, ரூ10 ஆயிரம் ரொக்கம், பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவை இருந்தன. என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த அந்தமான் தம்பதி தாம்பரம் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். பின் பயணம் செய்த பஸ் டிரைவருக்கு போன் செய்து பையை தவறவிட்டதாக கூறியிருக்கிறார்கள். அதற்கு அந்த பஸ் டிரைவர் பஸ்சில் பை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் அந்த ஆம்னி பஸ் டிரைவரான அரியலூர் மாவட்டம் மேலவண்ணத்தை சேர்ந்த வெங்கடேசன் (27) என்பவரை நேரில் அழைது விசாரித்தனர். விசாரணையில் அவர் அந்தமான் தம்பதி தவறவிட்ட நகை பையை திருடி விட்டு கிளாம்பாக்கத்தில் மறைத்து வைத்து நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார், நகையுடன் அந்த பையை பறிமுதல் செய்து தம்பதியிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஆம்னி பஸ் டிரைவர் வெங்கடேசனிடம் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications