ஆட்சி அதிகாரத்தில் பங்கு- விஜய்யின் அறிவிப்பு வந்த உடனே 'கூட்டணிக்கு' இப்பவே துண்டு போடும் கட்சிகள்!
சென்னை: ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு அளிப்போம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்த சிறிது நேரத்திலேயே அரசியல் கட்சிகள் ஓடோடி வந்து வாழ்த்துகளைக் குவித்து இப்பொழுதே கூட்டணிக்கு துண்டு விரிக்கத் தொடங்கிவிட்டன. ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது என்கிறது விசிக.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய், ஆட்சி- அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு வழங்குவோம் என்றார்.

நடிகர் விஜய் பேசி முடித்த உடனேயே இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் தமது எக்ஸ் பக்கத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் தன்னெழுச்சியாக மக்கள் கூட்டம் வந்து கலந்து கொண்டதையும், அவர்களது உணர்வையும் பார்க்க முடிந்தது. மாநாட்டில் நீங்கள் ஆற்றிய உரை மெய்சிலிர்க்க வைத்தது, இன்றைக்கு எந்த கட்சி தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டுமோ? அதை துணிவோடும், தெளிவோடும், வீரத்துடனும், விவேகத்துடனும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் உங்கள் முயற்சி வெற்றி பெற தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எல்லாவற்றிலும் உச்சமாக சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்தை முன்னிலைப்படுத்தி இருக்கிறீர்கள். வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி, இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருப்பதாவது: வலுவான கொள்கை; கோட்பாடுகள்; அவற்றை அடைவதற்கான போராட்டங்கள்; முன் அனுபவங்கள் ஏதுமின்றி திரையுலகம், விளையாட்டு எனப் பிற துறைகளில் பெறக்கூடிய புகழ், விளம்பரம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு அண்மைக்காலமாக பலரும் அரசியலுக்குள் நுழைகிறார்கள். தமிழகத்தை பொறுத்தமட்டிலும் திரை உலக புகழே பலரையும் ஆட்சி - அதிகாரத்தில் அமர வைத்துள்ளது. கொள்கை - கோட்பாடுகளை முழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் நடைமுறையில் பெரும் தோல்வியுற்று விட்டனர். மேலும், அவர்களே தமிழ்ச் சமூகத்தின் பிரதான எதிரிகளாக பரிணமித்துவிட்ட நிலையில் விரும்பியும் விரும்பாமலும் புதிய சூழல்களை ஏற்றுக் கொள்ளும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அண்மையில் துவங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டை தம்பி விஜய் இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.! அவருக்குப் பாராட்டுக்கள்.!!
தமிழ்நாட்டில் கடந்த 75 வருடத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு எனும் கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாக பேசவும் இல்லை; அதற்கான பல சூழல்கள் ஏற்பட்ட பொழுதும் ஆட்சியில் எந்த கட்சிக்கும் பங்கு அளிக்கவுமில்லை. ஆனால், தம்பி விஜய் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன் வைத்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சி துவங்கப்பெற்ற நாள் முதல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மட்டும் சொல்லாமல், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிக்கும் கூட்டணி ஆட்சி முறையே தமிழகத்தில் நிலவும் அனைத்து அவலங்களுக்கும் தீர்வு என்பதை வலியுறுத்தி வருகிறது. 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அளவு மாற்றத்தையும், குண மாற்றத்தையும் நிகழ்த்தும்.! அதுவே தமிழக மக்களுக்கு புதிய விடியலை உருவாக்கும்.!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா: ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் திரு. விஜய். அவருக்கு வாழ்த்துகள். 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும்.
விஜய்யின் அறிவிப்பு வந்த உடனேயே அரசியல் கட்சிகள் கூட்டணிக்காகவே இத்தகைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications