தமிழக அரசு, அறநிலையத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்
பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் ரூ.1,000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசுத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான பொங்கல் போனஸ் தொகை தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதே போல அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் ரூ.1,000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில் ரூ.3000 என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். உள்ளாட்சி மன்ற பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும் மிகை ஊதியம் வழங்கப்படும்.

சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு ரூ1,000 முதல் ரூ.3,000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2,000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும். பொங்கல் பண்டிகை கொண்டாடிட ஏதுவாக சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல அறநிலையத்துறையில் வேலை செய்யும் முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-2020-ம் ஆண்டின் 240 நாட்கள் பணிபுரிந்த பணியாளர்களுக்கு ரூ.1,000 வழங்கவும், அதற்கு குறைவாக பணிபுரிந்தோருக்கு அவர்கள் பணிபுரிந்த நாட்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் இத்தொகை வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதுநிலை மற்றும் முதுநிலையில்லாத அனைத்து திருக்கோயில் பணியாளர்கள் உட்பட அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் ரூ.1,000 வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அறநிலையத்துறையில் பணிபுரியும் 30 ஆயிரம் கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க கமிஷனர் டாக்டர்.சு.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications