நல்லா இருந்த கூட்டணியும்..பிரவீன் சக்ரவர்த்தி போட்ட குண்டும்! திமுக - காங்க்., கூட்டணியில் புகைச்சல்
சென்னை: ராகுல் காந்தியின் ஆலோசகரான பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்ததாக வெளியான தகவல் திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு கடன் மாநிலம் என பிரவீன் சக்ரவர்த்தி ஒரு ட்வீட் போட அது மோதலை மேலும் பெரிதாக்கியுள்ளது என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பல முறை தெளிவாக கூறி வருகிறார். ஆனால், சில காங்கிரஸ் தலைவர்கள், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் முக்கிய ஆலோசகரான பிரவீன் சக்கரவர்த்தி விஜயை நேரில் சந்தித்ததாக வெளியான தகவல், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரவீன் சக்கரவர்த்தி
சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் விஜயின் இல்லத்தில் இரவு நேரத்தில் இந்தச் சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்தச் சந்திப்பு ரகசியமாகவே இருந்தது. ஆனால் அது வெளிச்சத்திற்கு வந்ததும், காங்கிரஸ் கட்சிக்குள் இது பெரிய அதிருப்தியை உருவாக்கியது. குறிப்பாக, திமுகவுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸின் நிலைப்பாட்டிற்கு முரணான பேச்சுவார்த்தை நடக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
திமுக - காங்கிரஸ்
மேலும், வரும் 2026 தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக சார்பில் போட்டியிடும் எண்ணம் பிரவீன் சக்கரவர்த்திக்கு இருப்பதாக வந்த தகவலும், கட்சிக்குள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால், ஏற்கனவே உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே, திருப்பூர் அருகே செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, "அதிமுக ஆட்சி முடிவடைந்தபோது, தமிழ்நாடு கடன் சுமையால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது. இப்போது திமுக ஆட்சியில் மாநிலம் முன்னேற்றம் அடைந்துள்ளது" என்று கூறினார்.
தமிழகத்தின் கடன்
இந்த கருத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து விமர்சித்தார் பிரவீன் சக்கரவர்த்தி. தமிழ்நாடு தற்போது நாடு முழுவதும் அதிக கடனில் உள்ள மாநிலமாக மாறிவிட்டது என்றார். மேலும், மாநிலத்தின் கடன் சுமை, வருவாய், வளர்ச்சி விகிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு விமர்சித்தது, திமுகவுக்கு எதிரான மறைமுக தாக்குதல் எனக் கருதப்படுகிறது.
திமுக தலைமை
இது மட்டுமல்லாமல், அவரது விஜயுடன் நடந்த சந்திப்பும் வெளிச்சத்திற்கு வந்ததால், கூட்டணிக்குள் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, திமுக தலைமை இந்தச் சம்பவத்தால் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணியை பாதிக்கும் எந்த செயலையும் ஏற்க முடியாது என்று திமுக நேரடியாக காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
செல்வப் பெருந்தகை
ஆனால், இந்த சர்ச்சைக்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, "பிரவீன் சக்கரவர்த்தி தனிப்பட்ட முறையில் என்ன பேசுகிறார் என்பது காங்கிரஸின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல. விஜயுடன் நடந்த சந்திப்புக்கும் காங்கிரஸுக்கும் சம்பந்தமே இல்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி 2026 தேர்தல் வரை தொடரும்" என்று விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துகள் குறித்து திமுகவின் உயர்மட்ட தலைவர்கள் இதுவரை எந்தத் திறந்த விமர்சனமும் செய்யாததையும் கவனிக்க வேண்டும். ஆனால், அவரின் இந்த நடவடிக்கைகள் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சில அதிர்வுகளை உருவாக்கியிருப்பது உண்மை தான் என காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications