பிரதமர் கொடுப்பது இலவசம் இல்லை.. அது மக்களுக்கான உரிமை.. அண்ணாமலை கொடுத்த விளக்கம்
சென்னை: பிரதமர் மோடி அளித்து வருவது இலவசங்கள் கிடையாது என்றும், மக்களுக்கான உரிமையைத்தான் பிரதமர் மோடி அளித்து வருகிறார் என்றும் சென்னையில் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்திய மக்கள் முன்னேற்ற கட்சித் தலைவரான அர்ஜூன மூர்த்தி பாஜகவில் இணையப்போவதாக பேசப்பட்ட நிலையில், நேற்று அவர் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகம் சென்றார்.
தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலையை சந்தித்து அவரது முன்னிலையில் அர்ஜூன மூர்த்தி பாஜகவில் இணைந்தார்.

ஏன் கருத்து கேட்டு வருகிறது?
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பாஜக தலைவர் கே.அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்வதை விட்டுவிட்டு... அது தொடர்பாக தமிழக அரசு ஏன் கருத்து கேட்டு வருகின்றது என்று தெரியவில்லை. கருத்து கேட்பதினால் என்ன இருக்கிறது?.. ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்தால் அதற்கு பாஜக உறுதுணையாக இருக்கும். உடனே அரசு அதை செய்ய வேண்டும்.

மின் கட்டண உயர்வு
இதேபோல் தமிழக அரசு மின் கட்டண உயர்வு குறித்து மக்களிடம் கருத்து கேட்பது என்பது முழுக்க.. முழுக்க.. நாடகம் தான். அனைத்து மின் நிறுவனங்களிடமும் பணம் வசூல் செய்வதற்காகத் தான் இப்படி செய்கிறார்கள். இப்படியெல்லாம் செய்யாமல் உடனடியாக தமிழக அரசு மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பேசினார்.

இலவசம் குறித்து பேச்சு
இலவசங்கள் வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு பதில் அளித்து அண்ணாமலை கூறுகையில், ''இலவசங்கள் வேண்டுமா? வேண்டாமா? எனற விவாதம் தொடர்ந்து பேசப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. மக்களின் அத்தியாவசிய தேவைகளான கல்வி, குடிநீர், சுகாதாரம் போன்றவற்றை அரசு மக்களுக்கு கட்டாயமாக கொடுக்க வேண்டி உள்ளது. இதிலும் கல்வி என்பது அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தில் இது அடிப்படை உரிமையாக உள்ளது. இதற்கு எதிராக நாங்கள் பேசவில்லை. பிரதமர் மோடி அளிப்பது இலவசங்கள் கிடையாது. அவர் மக்களுக்கான உரிமயைத்தான் வழங்கி வருகிறார்.

மவுனமாக இருக்கிறது
மாண்புமிகு பிரதமர் மோடியும் வீடு இல்லாத மக்களுக்கு வீடு கொடுத்து வருகிறார். எரிவாயு சிலிண்டர் கொடுக்கிறார். ஆனால் இவையாவும் இலவசங்கள் கிடையாது. மற்றவர்கள் வழங்கி வரும் இலவசங்கள் வேறு. ராஜஸ்தானில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், அங்குள்ள காங்கிரஸ் கட்சி வீட்டு இல்லத்தரசிகளுக்கு இலவசமாக் செல்போன் வழங்க போவதாக கூறி வருகிறது. எனவே அவர்கள் கூறும் இலவசம் வேறு.. நாங்கள் வழங்குவது வேறு... இதேபோல் திமுக அரசும் நிறைவேற்ற முடியாத சுமார் 500 க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்து விட்டு தற்போது மவுனமாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications