50 சதவீத மானியத்தில் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் திட்டம்! மத்திய அரசின் சூப்பர் சான்ஸ்
சென்னை: இன்றைய இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசாங்கங்கள் எத்தனையோ வழிகளை ஏற்படுத்தி தந்துள்ளன.. அத்துடன், பல வகையிலும் மானியம் தருகிறது.. சொந்தமாக தொழில் தொடங்க நினைக்கிறவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தரும் மானியங்கள் பேருதவி புரிந்து வருகின்றன.. அதில் ஒன்றுதான், உணவு பொருள் தயாரிப்பதற்கும் மானியம் ஒதுக்கும், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டமாகும்.. இந்த திட்டத்தின் பலன்கள், நடைமுறைகள், என்னென்ன என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க கொண்டுவரப்பட்ட திட்டம்தான், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டமாகும்.. 2021 முதல் 2025 வரை என 5 வருடங்களுக்கு இதனை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது..

உணவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்களை ஊக்குவிப்பதற்காகவும், உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தவும் கொண்டுவரப்பட்ட திட்டம் இதுவாகும். இத்திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள குறுந்தொழில் நிறுவனங்களுக்கும், நன்றாக செயல்படும் நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கும் மானியம் வழங்கப்படுகிறது.
35 சதவீதம் மானியம்
அதன்படி, தனிநபர் மற்றும் மகளிர் குழு, உழவர் உற்பத்தியாளர் சார்ந்த நிறுவனங்களுக்கு, இயந்திர தளவாடங்கள் திட்ட மதிப்பில், 35 சதவீதம் மானியம், அதிகபட்சம், 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.வேளாண் உற்பத்தி நிறுவனங்களுக்கு, 3 கோடி ரூபாய் வரையிலான திட்டங்களுக்கு, 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த 35 சதவீதம் மானியத்தில், மத்திய அரசின் பங்கு 60 சதவீதமும்; தமிழக அரசின் பங்கு 40 சதவீதமுமாக இருக்கும். தொழில்முனைவோர் தரப்பில், 10 சதவீதம் சொந்த நிதியை செலவிட வேண்டும். மீதியை வங்கிகளில் கடனாக வாங்கி கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது.
வங்கி கடன் - உள்கட்டமைப்பு வசதி
மேலும், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் வரை இந்த திட்டத்தின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது.
சிறுதானியங்கள் சார்ந்த தொழில் நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் மற்றும் உணவு சார்ந்த மதிப்புக் கூட்டு தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள், தனி நபர், மகளிர் சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர்கள் குழுவினர், ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டுள்ள குறு நிறுவனங்களை விரிவாக்கம் செய்தல், புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்பப் பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.
தமிழகம்தான் டாப்
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, 12,000 குறு நிறுவனங்கள் பயன்பெற்று வருகின்றன.. இந்த திட்டத்தின் கீழ் மசாலா வகைகள், ஊறுகாய், மாவு வகைகள், ஊட்டச்சத்து மாவு தயாரிப்பு போன்ற தொழில்களை துவங்க மானியத்துடன், கடன் உதவி வழங்கப்பட்டு வருகின்றன,.
அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே, பிரதமர் உணவு பதப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் தான் முன்னணியில் உள்ளது. எனவேதான் கடந்த வருடம், மானியத்தை விரைந்து விடுவிக்குமாறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை உயரதிகாரிகள் கடந்த வருடம் டெல்லி சென்று, மத்திய அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருந்தனர்..
சபாஷ் மத்திய மாநில அரசு
இதனை தொடர்ந்து குறு, சிறு, நடுத்தர தொழில் துறையின் கீழ், உணவுப் பொருட்கள் தயாரிப்பு தொழில் துவங்க வழங்கப்படும் மானியத்திற்காக, மத்திய, மாநில அரசுகள் இணைந்து 86 கோடி ரூபாயை விடுவித்திருந்ததும் நினைவிருக்கலாம்.
எனவே, இந்த திட்டத்தில் இணைந்து பலனை பெற விருப்பமுள்ளவர்கள் https://www.mofpi.gov.in/pmfme/enews2.html என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications