நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம் விலகல்
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அதன் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி இருவர் மீதும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கட்சியில் இருந்து விலகுவதாக ராஜீவ்காந்தி அறிவித்தார்.

பின்னர் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரமும் விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கல்யாணசுந்தரம் எழுதியுள்ளதாவது:

(நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு பகிரி வழியாக அனுப்பப்பட்ட எனது கடிதம்) மரியாதைக்குரிய. சீமான் அவர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி. பொருள் : கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுதல் - குறித்து.
அண்ணா வணக்கம். கடந்த 11 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராகவும், இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறேன். சமீப காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக இனிமேல் கட்சியில் தொடர முடியாத நிலையிலிருப்பதால், இக்கடிதம் மூலமாக எனது விலகலை அறிவிக்கிறேன்!!
இந்த பயணத்தில் என்னோடு பேரன்போடும், உதவிகரமாகவும் பயணித்த அனைத்து உறவுகள் பொறுப்பாளர்கள் என் அன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும், தங்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவிப்பதோடு, எதிர்கால உங்கள் பயணம் பெரு வெற்றியடைய வாழ்த்துகிறேன்!! . இவ்வாறு கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
