'ஸ்டெர்லைட்' பாணியில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்- அக்.17-ல் சட்டசபை நோக்கி பேரணி!
சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தைப் போல பரந்தூர் 2-வது விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 80-வது நாளாக பல்வேறு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். 100 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் உச்சகட்டமாக ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. 2018-ல் நடந்த இப்போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தமிழகம் முழுவதையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
தற்போது வடதமிழகத்தில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டமும் தீவிரமடைந்துள்ளது. சென்னையில் 2-புதிய பசுமை விமான நிலையமானது காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 13 கிராமங்களை உள்ளடக்கி 4,750 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்களுக்கு பல்வேறு அரசியல் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டு அறிந்து வருகின்றனர்.
இந்த புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால் முழுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகும் ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது பணிகளை முடித்து இரவு நேரங்களில் தொடர்ந்து 80வது நாளாக போராடி வருகின்றனர். அக்கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து ஆதரவு தெரிவிக்க இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசன் ஏகனாபுரத்திற்கு இன்று வருகை தந்தார்.
ஏகனாபுரம் பகுதி மக்களிடையே கருத்துக்களை கேட்க ஏற்கனவே அதிமுக , நாம் தமிழர் கட்சி ,பாட்டாளி மக்கள் கட்சி , விசிக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வருகை தந்திருந்தனர். அறவழியில் தொடர்ந்து போராடிவரும் அக்கிராம மக்களிடம் கொட்டும் கன மழையினிலும் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் தமிழரசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில் அடுத்த கட்ட போராட்டமாக வருகின்ற 17-ந் தேதி அன்று 13 கிராம மக்கள் தங்களது கிராமங்களில் இருந்து பேரணியாக சட்டசபை நோக்கி செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications