TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மறுதேர்வு நடத்தப்படுமா? சென்னையில் நடந்த போராட்டம்! எச்சரிக்கை!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடைபெற்றது. மறுதேர்வு குறித்து ஆகஸ்டு 20 ஆம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி முடிவெடுத்து அறிவிக்காவிட்டால், மதுரை அல்லது திருச்சியில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம் என்று அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், வனக் காவலர் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. 3,935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இந்த குரூப் 4 தேர்வை மொத்தம் 11,48,019 பேர் எழுதினர்.

ஆனால், இந்தத் தேர்வில் கேட்கப்பட்டு இருந்த வினாக்கள், தேர்வுக்கான பாடத்திட்டத்தை தாண்டி கேட்கப்பட்டு இருந்ததாக தேர்வர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. குரூப் 4 தேர்வின் பாடத்திட்டம், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களை அடிப்படையாக கொண்டது.
ஆனால், கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி நடந்த குரூப் - 4 தேர்வில், பிஎச்.டி மாணவர்களின் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. 27 கேள்விகள், பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டுள்ளன. எனவே, நடந்து முடிந்த குரூப் 4 தேர்வை தமிழக அரசு ரத்து செய்து, மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் குரூப் 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து நிலை போட்டித் தேர்வர்கள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் முன்பு நேற்று போராட்டம் நடைபெற்றது.
நடந்து முடிந்த குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், டிஎன்பிஎஸ்சி வெளிப்படை தன்மையுடன் தேர்வுகளை நடத்த வேண்டும், குரூப் - 1, குரூப் 2 தேர்வுகளை தமிழில் எழுதினால் மட்டுமே 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டித் தேர்வர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மறுதேர்வு குறித்து ஆகஸ்டு 20 ஆம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி முடிவெடுத்து அறிவிக்காவிட்டால், இந்த மாத இறுதியில் மதுரை அல்லது திருச்சியில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கான உத்தேச விடைக்குறிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த மாதம் வெளியிட்டது. ஆட்சேபங்கள் இருந்தால் ஜூலை 28 ஆம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு முடிவுகள் அடுத்த மூன்று மாதங்களில் வெளியிடப்படும் என்று ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications