வெள்ளம் பாதித்த இடங்களில் மனைகள் வாங்க தயங்கும் மக்கள்! அப்படியிருந்தும் சாதனை படைத்த பதிவுத்துறை!
சென்னை: சென்னை மற்றும் தென் மாவட்டங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மனைகள் வாங்க பொதுமக்கள் தயங்குவதாக பத்திரப்பதிவுத் துறை செயலாளர் விடுத்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனலும் இந்நிதியாண்டில் பதிவுத்துறை வருவாய் வளர்ச்சியில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலர் ஜோதி நிர்மலாசாமி விடுத்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;
2023-24ஆம் நிதியாண்டில் இந்த வருடம் பிப்ரவரி, 2024 மாதத்தில் மட்டும் ரூ.1,812.70 கோடி வருவாயை பதிவுத்துறை ஈட்டியுள்ளது. சென்ற நிதியாண்டில் பிப்ரவரி, 2023-ல் அடைந்த வருவாய் ரூ.1,593.95 கோடியை விட இது ரூ.218.74 கோடி அதிகமாகும்.
இந்த நிதியாண்டில் பிப்ரவரி, 2024 முடிய மொத்தம் ரூ.16,653.32 கோடி வருவாய் பதிவுத்துறையால் ஈட்டப்பட்டுள்ளது. இது சென்ற நிதியாண்டில் பிப்ரவரி, 2023 வரை அடைந்த வருவாய் ரூ.15,481.72 கோடியை விட ரூ.1171.60 கோடி (7.57%) அதிகமாகும்.
ஜியோ கோ-ஆர்டினேட்ஸ் உடன் கூடிய புகைப்படத்தை கிரைய ஆவணத்துடன் இணைத்து ஆவணப்பதிவு மேற்கொள்ளும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதால் கட்டட மதிப்பிற்கான முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்துவதை தவிர்க்கும் நோக்கில் கட்டடங்களை மறைத்து ஆவணம் பதிவு செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டடங்களின் மதிப்புக்கான உரிய முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் அரசுக்கு செலுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதலீடுகளின் வளர்ச்சி, தனிநபர் வருவாய் பெருக்கம் ஆகியவற்றின் காரணமாக பதிவுத்துறையில் இதை விடவும் கூடுதலான வருவாய் இந்த நிதியாண்டில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மனைகளின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளநீர் ஒரு சில நாட்களில் வடிந்துவிட்ட போதிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மனைகளை வாங்க பொதுமக்கள் தயங்குவதால் மனைகளின் ஆவணப்பதிவு குறைந்துள்ளது. இதனால் கூடுதலாக எதிர்பார்க்கப்பட்ட வருவாய் வராமல் போனது. இந்நிலையிலும் பதிவுத்துறை கடந்த ஆண்டில் இதே பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் ஈட்டிய ரூ.15,481.72 கோடியை விட கூடுதலாக ரூ.1171.60 கோடி அதாவது ரூ.16653.32 கோடி வருவாயை ஈட்டியுள்ளது இது வரை எய்தப்பட்ட அதிக வசூல் சாதனையாகும்.












Click it and Unblock the Notifications