மாணவிகள் சேர்க்கை 29% உயர்வு.. தூள் கிளப்பும் ‘புதுமைப் பெண்’... சக்சஸ் ஆன ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’ !
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த 'புதுமைப் பெண்' திட்ட'த்தால் உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை ஒரு ஆண்டில் 29% ஆக அதிகரித்துள்ளது.
மாஸ்டர் ப்ளான் போட்ட ஸ்டாலின்:

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வடசென்னை பாரதி மகளிர் கல்லூரியில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற 'புதுமைப்பெண்' திட்டத்தினை முதற்கட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை கிடைக்க இந்தப் "புதுமைப் பெண்" திட்டம் வழி ஏற்படுத்தித் தருகிறது.

இத்திட்டம் தொடங்கப்பட்ட 5 மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 56 ஆயிரம் மாணவிகள் பயனடைந்தனர். பெரிய அளவில் இத்திட்டம் பயனளித்ததால், 'புதுமைப் பெண் 2.0' விழாவைக் கடந்த பிப்ரவரியில் முதல்வர் தொடங்கி வைத்தார். அப்போது அவர், 'வரும் ஆண்டில் இதனால் மேலும் ஏறக்குறைய 1,04,347 மாணவிகள் பயன்பெற உள்ளனர்' என்ற மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னார்.
சக்சஸ் ஆன புதுமைப் பெண் 2.O :

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள் இதற்குத் தகுதியானவர்களாக முதற்கட்டமாக அரசு எடுத்துக் கொண்டது. மேம்படுத்தப்பட்ட 'புதுமைப்பெண் 2. 0' திட்டமோ, தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு அடிப்படையில் படித்த மாணவிகளை உள்ளடக்கிக் கொண்டது. அதனால், அதிக அளவிலான மாணவிகள் பயனடையும்படி அரசு மாற்றம் செய்தது.
கடந்த பிப்ரவரி நிலவரப்படி, இத்திட்டத்தால் உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 27% ஆக உயர்ந்தது. குடும்ப வறுமையால் உயர்படிப்பு என்பது எட்டாக்கனியாக இருந்த பல தரப்பு மாணவிகள் கல்லூரியில் சேர்வதில் அதிக ஆர்வம் காட்டினர்.

திட்டம் தொடங்கப்பட்ட 5 மாதங்களில் 69 கோடியே 44 லட்சம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாத புள்ளிவிவரத்தின்படி 1 லட்சத்து 56 ஆயிரம் மாணவிகள் பயனடைந்தனர். 12 ஆயிரம் மாணவிகள் இந்தத் திட்டத்தால் உயர்கல்வியில் சேர்ந்தனர்.
கடந்த 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில் குடும்ப வறுமையால் உயர்கல்வியைத் தொடரமுடியாமல் கைவிட்ட 10 ஆயிரத்து 146 மாணவிகள் இத்திட்டம் வந்தபின் உயர்கல்வியில் சேர்ந்தனர்.
1 லட்சத்து 56 ஆயிரத்து 11 பேர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் மாணவிகள் மட்டும் 48 ஆயிரத்து 660 பேர். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் சுமார் 50 ஆயிரத்து 550 பேர். பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் 44 ஆயிரத்து 880 பேர். பழங்குடி மாணவிகள் 1900 பேர் எனப் பலதரப்பினர்கள் பயனடைந்ததாக அரசு சார்பில் வெளியான புள்ளிவிவரங்கள் கூறியிருந்தன.
ஒரே ஆண்டில் 29% உயர்ந்த சேர்க்கை:

இந்நிலையில் 27% ஆக இருந்த மாணவிகளின் சேர்க்கை இப்போது 29% ஆக அதிகரித்துள்ளது எனத் தெரியவந்துள்ளது. உயர் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் தந்துள்ள தகவலின்படி, கடந்த கல்வி ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022-23 ஆம் ஆண்டில் பெண்களின் சேர்க்கை கிட்டத்தட்ட 29% அதிகரித்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 2021-2022 ஆம் ஆண்டில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கையானது சுமார் 71,008 ஆக உள்ளது. 2022-23ஆம் கல்வியாண்டில் 'புதுமைப் பெண்' திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, எண்ணிக்கை 91,485 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2022-23 ஆம் ஆண்டில், குறைந்தபட்சம் 4,806 அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளும், 12,711 அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
இவை தவிர மீதமுள்ள பயனாளிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களாக உள்ளனர் என்று உயர்கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"பட்டியலிடப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்களின் சேர்க்கை 71%, பழங்குடியினர் 41% , பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (முஸ்லீம்) 51%, அறிவிக்கப்படாத சமூகங்களைச் சேர்ந்தவர்கள் 32%, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் (MBC) 35% எனச் சேர்க்கையின் அளவு கணிசமான உயர்ந்துள்ளது" என்கிறார் ஒரு அதிகாரி.

மேலும் அவர், "புதுமைப் பெண்' திட்டத்தின் வெற்றிக்கு இந்த எண்ணிக்கையே வலுவான சான்றுகளை வழங்கி உள்ளது" என்றும் அவர் தெரிவிக்கிறார்.












Click it and Unblock the Notifications