ரயிலில் சிக்கிய 4 கோடி..பாஜகவை விடாத பஞ்சாயத்து! இன்னும் எத்தனை ‘தலை’ உருள போகுதோ..எம்பிக்கு சிக்கல்
சென்னை: மக்களவைத் தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதிக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக மூன்று மாத அவகாசம் கேட்டு அவர் கடிதம் அனுப்பிய நிலையில், நேரில் சென்று விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், அதற்கு முன்னதாக தேர்தல் பறக்கும் படைகள் மூலமாக மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடைபெற்றதோடு, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 640 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இது இந்திய அளவில் 3வது இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இது இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கடும் கண்காணிப்பு இருந்த போது, கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி லோக்சபா தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்த சூழலில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பேர் 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள பாஜக எம்.எல்.ஏவும், நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகியோர் என்பது தெரியவந்தது. பிடிபட்ட சதீஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாஜக நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரனுக்காக அவர்கள் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவரான முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். நெல்லையிலும் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக 15க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே கைப்பற்றப்பட்ட பணம் தன்னுடையது என முஸ்தபா என்பவர் உரிமை கோரினார். இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் ஈரோட்டை சோ்ந்த ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் உணவகம் நடத்தி வரும் முஸ்தபாவை நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி போலீஸாா் சம்மன் அனுப்பினா். அதன்பேரில், எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அவா் விசாரணைக்கு ஆஜரானாா்.
இந்நிலையில் பணத்துக்கு உரிமை கோரிய முஸ்தபா, பொய் சொல்லி இருப்பதும் அது அவருடைய பணம் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. முஸ்தபாவின் வங்கி கணக்குகளை ஆராய்ந்த போது இவ்வளவு தொகை பரிமாற்றம் நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கில் திடீர் திருப்பமாக முஸ்தபா பணத்திற்கு உரிமை கோருமாறு அறிவுறுத்திய நபர் யார் என்பதை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பாஜக அமைப்பு செயலாளரான கேசவ விநாயகமும் விசாரணைக்கு ஆஜரானார். இதற்கிடையே வழக்கில் முக்கிய திருப்பமாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் சென்னையை சேர்ந்த ஹவாலா இடைத்தரகர் பங்கஜ் சூரஜ் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புதுச்சேரி செல்வகணபதி தன்னை தொடர்பு கொண்டு 20 கிலோ தங்க கட்டிகளை விற்று தருமாறு கூறியதோடு மேலும் ஐந்து கிலோ தங்க கட்டிகளை புதுச்சேரியிலேயே செல்வ கணபதி விற்பனை செய்து விட்டதாகவும், தேர்தல் செலவுக்காக தான் தங்கக் கட்டிகளை விற்று கொடுத்தேன் என்றும் சூராஜ் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாஜக எம்பி செல்வகணபதி சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என கடிதம் அனுப்பி இருந்தார். இதனையடுத்து செல்வகணபதியை நேரில் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து அவர்கள் விரைவில் புதுச்சேரி செல்வார்கள் எனவும் செல்வகணபதியின் வீட்டில் வைத்தே அவரிடம் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் செல்வகணபதிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஹவாலா பணப்பரிவர்த்தனை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள செல்வகணபதி பதவி விலக வேண்டும் என புதுச்சேரி காங்கிரஸ் சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications