நாமக்கல் அருகே கிராமத்தில் ஆங்கிலம் பேசினால் யாருக்கும் தெரியாது.. எல் முருகன் சரமாரி கேள்வி
சென்னை: தமிழ்நாட்டில் ஆங்கிலம் எத்தனை பேருக்கு தெரியும்? நாமக்கல் அருகே உள்ள கிராமத்தில் போய் ஆங்கிலத்தில் பேசினால், யாருக்கும் ஆங்கிலம் தெரியாது. அதனால் தான் மும்மொழிக்கொள்கை வேண்டும் என்று சொல்கிறோம்" என்று மத்திய இணையமைச்சர் எல் முருகன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். அப்போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லாதது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலை பார்ப்போம்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். எல் முருகன் கூறுகையில், "தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை திமுக அரசு வஞ்சிக்கிறது. மூன்றாவதாக ஒரு மொழியை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதுதான் புதிய தேசிய கல்விக்கொள்கையாகும். தமிழ்நாட்டில் ஆங்கிலம் எத்தனை பேருக்கு தெரியும்?.

நாமக்கல் அருகே உள்ள கிராமத்தில் போய் ஆங்கிலத்தில் பேசினால், யாருக்கும் ஆங்கிலம் தெரியாது. அதனால்தான் மும்மொழிக்கொள்கை வேண்டும் என்று சொல்கிறோம். மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார். வளர்ச்சியை நோக்கி இருக்கிற இளைஞர்களை பின்னோக்கி இழுக்க வேண்டாம்.
தேசிய கல்விக் கொள்கை நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, பல வல்லுனர்கள் ஆய்வு செய்து அதன் பரிந்துரைகளின்படி நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை, மாணவர்களுக்கு தொடக்கக் கல்வியை அவர்களின் தாய்மொழியில் பயிற்றுவிக்க ஊக்குவிக்கிறது. மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறது. அது மாணவர்களின் உலகளாவிய அறிவை வளர்க்க நிச்சயம் உதவும்.
மூன்றாவது மொழி இந்தி அல்ல.. அது எந்தவொரு இந்திய மொழியாகவும் இருக்கலாம். மத்திய அரசு எந்தவொரு குறிப்பிட்ட மொழியைத்தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. புதிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவர்களுக்கு தரமான கல்வியுடன் பிற ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளை நிச்சயம் வழங்கும். கல்வி, வருங்கால சமுதாயத்தின் தூண்களான இளைஞர்களின் வாழ்க்கைக்கு வளமான அடித்தளத்தை அமைக்கிறது.
பி எம் ஶ்ரீ பள்ளிகளில் உள்ள அடல் புத்தாக்க ஆய்வகங்கள் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வர உதவும். ஆனால் தேசிய கல்விக்கொள்கைக்கு சிக்கல் ஏற்படுவதால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய ரூ. 5000 கோடி நிதி தடைப்பட்டுள்ளது. எனவே கல்வியில் விளையாட வேண்டாம்.. கல்வி விஷயத்தில் அரசியல் வேண்டாம். அரசியல் செய்வதற்கு வேறு விஷயங்கள். ஆனால் கல்வியில், இளைஞர்களின் முன்னேற்றத்தில் அரசியல் செய்வதை திமுகவும், உதயநிதி ஸ்டாலினும் நிறுத்த வேண்டும் " என்றார்.
அப்போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லாதது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய இணையமைச்சர் எல் முருகன் பதில் அளிக்கையில், சரியாக முறையில் எல்லா மொழிகளுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் எல்லா பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர்களின் காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதா... ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதா.. மொழி ஆசிரியர்கள் எல்லா இடத்திலும் நிரப்பப்பட வேண்டும். அனைத்து மொழிகளும் கற்பிக்கப்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications