தமிழர்கள் யார் என பிரதமருக்கு புரியவில்லை.. திருவள்ளூரில் ராகுல் காந்தி பிரசாரம்
சென்னை: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வருகை தந்துள்ளார். முதலில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, மோடி அமித்ஷா உத்தரவை செயல்படுத்தும் ஒருவரை தமிழக முதல்வர் ஆக்க பாஜக நினைக்கிறது.. அதிமுகவை பாஜக விழுங்கிவிட்டது. தமிழ்நாட்டில் அதிமுக என்ற கட்சியே இல்லை என்றும் பேசினார்.
முதல் முறையாக ராகுல் காந்தி பிரசாரம் செய்ய தமிழ்நாடு வருவதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் வெற்றியை கொண்டாடி வரும் சூழலில், ராகுல் காந்தி சூட்டோடு சூடாக தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் அனல் பறக்க தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதல்வர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜய் உள்ளிட்ட தலைவர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திமுக கூட்டணியை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்கு பிரசாரம் செய்யாமல் இருந்தார். ராகுல் காந்தி அப்செட்டில் இருப்பதால்தான் பிரசாரம் செய்யவரவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. எனினும் டெல்லியில் நாடாளுமன்ற கூட்டம் உள்ளிட்ட பணிகளில் பிசியாக இருப்பதால்தான் ராகுல் காந்தி பிரசாரத்திற்கு வரவில்லை என்றும், அந்த பணிகள் முடிந்ததும் ராகுல் காந்தி வருவார் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வந்தனர்.
இந்த நிலையில், ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்வதற்காக வருகை தந்து உள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த ராகுல் காந்தி பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, "அதிமுகவை பாஜக விழுங்கிவிட்டது. அதிமுக என்ற கட்சி தமிழ்நாட்டில் இல்லை. மோடி, அமித்ஷா சொல்வதை கேட்பதை செயல்படுத்த ஒருவரை முதல்வராக்க நினைக்கிறது.
நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. ஆனால் தமிழ் மண்ணுடன் நெருக்கமான உறவு உள்ளது. எவ்வளவு தைரியம் இருந்தால் தமிழ் மண், மொழி, கலாச்சாரம் மீது ஆர்.எஸ்.எஸ்., பாஜக தாக்குதல் நடத்துவார்கள்? மகளிர் இட ஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வந்தார்கள். இந்தியா என்ற சிந்தனையை காப்பதற்காக மசோதாக்களை வீழ்த்தினோம். தமிழ் கலாச்சாரம், மொழி, பண்பாட்டை அழிக்க நினைக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.
தமிழர்கள் யார் என்பதை பாஜக இன்னும் புரிந்து கொள்ளவில்லை. தமிழுக்கும், தமிழர்களுக்கும் பல ஆயிரம் ஆண்டு வரலாற்று பாரம்பரியம் உள்ளன என்பது பாஜகவுக்கு தெரியவில்லை. சமூக நீதியை நாட்டிற்கே காட்டியுள்ளோம்" என்று பேசினார்.
தொடர்ந்து சோளிங்கர் செல்லும் ராகுல் காந்தி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றிவிட்டு திருச்சி செல்கிறார். திருச்சி துறையூர் தொகுதியில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் தோல்வி அடைந்தன. இந்த மசோதா தோல்வி அடைந்தது, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.
தொகுதிகளை 850 ஆக உயர்த்த முயற்சிக்கும் மத்திய அரசின் முயற்சி தோற்கடிக்கப்பட்டதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உற்சாகம் அடைந்துள்ளன. இந்த சூழலில்தான், அதே சூட்டோடு சூடாக ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். திருச்சி துறையூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு மாலை 5.10 மணிக்கு துறையூரில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5.25 மணிக்கு திருச்சி சென்றடைகிறார்.
திருச்சியில் இருந்து மாலை 5.40 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு டெல்லி செல்ல உள்ளார். ராகுல் காந்தி இன்று பிரசாரம் செய்ய உள்ள தொகுதிகளிலுமே காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது.












Click it and Unblock the Notifications