"ராகுல் காந்தி தன் சகோதரி மகளுடன் இருக்கும் படத்தை பகிர்ந்ததில் உள்நோக்கம் கிடையாது"- நிர்மல் குமார்
சென்னை: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி புகைப்படம் குறித்த சர்ச்சைக்கு பாஜக சமூக வலைதளப் பிரிவின் மாநில தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3,500 கி.மீ தூரத்துக்கு 150 நாட்கள் ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் செப். 7ம் தேதி தொடங்கிய நடைபயணம், தற்போது கேரளா மாநிலத்தில் 11வது நாளை எட்டியுள்ளது.
ராகுல் காந்தியின் நடைபயணத்தை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதலில் ராகுல் காந்தியின் டீ-சர்ட் குறித்து பாஜக தரப்பில் விமர்சிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவின் மாநில தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், ராகுல் காந்தி புகைப்படத்துடன் பகிர்ந்த ட்வீட் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்காவின் மகள் மிராயாவுடன் பேசிக் கொண்டிக்கிறார்.
அந்தப் புகைப்படத்தை ஒரு எமோஜி மட்டும்போட்டு நிர்மல் குமார் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் 2015ம் ஆண்டு ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் எடுக்கப்பட்டது. இதையடுத்து தாய்மாமன் உறவைக் கொச்சைப்படுத்திய நிர்மல் குமாரின் செயல் சரியில்லை என காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தனர்.
இதனைத்தொடர்ந்து அந்த ட்வீட்டை நீக்கிய நிர்மல் குமார், மீண்டும் அதே புகைப்படத்துடன் "குழந்தைகளுடன் மருதாணி வைத்து விளையாடும் இந்த பப்புவை கூட்டிக்கொண்டு யாத்திரை போகும் அந்த 10 பேரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது" என்ற கேப்ஷன் உடன் பதிவிட்டார். இருப்பினும் தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையாகவே சுற்றி வந்தது.
இந்த நிலையில் இந்த புகைப்படம் தொடர்பாக நிர்மல் குமார் "ஒன் இந்தியா தமிழிடம்" விளக்கமளித்துள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியின் பாத யாத்திரையின் போது ராகுல் காந்தி குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அக்கட்சி அதிகமாக பதிவிட்டு வருகிறது. கேரளாவில் கூட நேற்று ஒரு குழந்தைக்கு ராகுல் காலணி மாட்டிவிடுவது போன்ற புகைப்படம் வெளியாகியது. இதன் மூலம் குழந்தைகளுடன் ராகுல் காந்தி அன்பாக இருப்பது போல் காங்கிரஸ் காட்டிக் கொள்கிறது.
ஆனால் ராகுல் காந்தியே குழந்தை போல் மருதாணி வைத்து விளையாடக் கூடியவர் தான். அவரே குழந்தைத்தனமானவர் என்பதை பிரதிபலிக்கும் வகையிலே அந்த புகைப்படத்தை பகிர்ந்தேன். ஆனால் அந்த புகைப்படத்தை வட இந்திய ஊடகங்கள் சர்ச்சையாக்கி உள்ளனர். இந்த புகைப்படத்தை வைத்து தவறான கருத்துக்களை பரப்புகின்றன. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.
நான் பகிர்ந்த அந்த புகைப்படம் ஒரு துக்க நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றபோது எடுத்ததுதான். துக்க நிகழ்ச்சியில் கூட மருதாணி விஷயத்தை கவனித்துக் கொண்டு ராகுல் காந்தி சிரித்தபடி இருந்தார். இது அந்த காலகட்டத்திலேயே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்தப் புகைப்படத்தை தான் நான் பகிர்ந்து உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications