சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல்
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்னும் வெளியிடவில்லை. இந்த தாமதத்துக்கு 5 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை இடையே நிலவும் மோதல் தான் முக்கிய காரணம் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொகுதிகள் என்னென்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கு வேட்பளர்களை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது.

டெல்லியில் நேற்று வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
ராகுல் காந்தி அதிருப்தி
இந்த கூட்டத்தில் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். வேட்பாளர்களை இறுதி செய்வதில் கட்சி தொடர் சவால்களை சந்தித்து வருவது பற்றியும், உள்கட்சி கருத்து வேறுபாடுகளை கட்சி தலைவர்கள் சரிசெய்யாததால் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதோடு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் தொடர்பாக தலைவர்கள் இடையே இருக்கும் இணக்கமற்ற சூழலை கண்டித்தார்.
ராகுல் - தமிழக காங்கிரஸ் தலைமை மோதல்
அதோடு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பாக ராகுல் காந்தி தயாரித்த பட்டியலுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அளித்த பட்டியலுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தன. தமிழக காங்கிரஸ் கமிட்டி அளித்த வேட்பாளர்களின் பரிந்துரையை ராகுல் காந்தி ஏற்கவில்லை. அதேபோல் சில தொகுதிகளுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமை பரிந்துரைத்த வேட்பாளர்களை ஏற்க மாநில தலைமை தயங்கி உள்ளது. இதனால் ராகுல் காந்தி கடும் அதிருப்தியடைந்தார்.
5 தொகுதிகளால் குழப்பம்
இதனால் தான் கூட்டம் முடிந்தும் கூட இன்னும் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் வெளியிடவில்லை. இதற்கு முக்கிய காரணம் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருவது தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விளவங்கோடு, கிருஷ்ணகிரி, சிங்காநல்லூர், பென்னாகரம், மேலூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. குழப்பங்கள் தொடர்ந்து வருகின்றன. இதனால் தான் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து வெளியிட முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications