ஐஆர்சிடிசி, யுடிஎஸ் இனி தேவையில்லை.. வந்தாச்சு ரயில் ஒன் ஆப்! என்னென்ன அம்சங்கள் உள்ளன? முழு விவரம்
சென்னை: தற்போதைய நவீன காலக்கட்டத்துக்கு ஏற்றபடி புதுப்புது அப்டேட்களை ரயில்வே வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ரயில் டிக்கெட் புக் செய்வதற்கு ஐஆர்சிடிசி, ரயில் கனக்ட், யுடிஎஸ் செயலி என தனித்தனியாக செயலிகள் உள்ள நிலையில் இவை அனைத்திற்கும் சேர்த்து ஒரே செயலியாக 'ரயில் ஒன்' செயலியை இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
முன்பதிவு ரயில் டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட், ரயில்கள் மற்றும் பி.என்.ஆர். எண் குறித்த ஸ்டேட்டஸ், பயண திட்டமிடல், ரயில் உதவி சேவை, ரயிலில் உணவு முன்பதிவு என எல்லாவற்றையும் இந்த ஒரே செயலி மூலமாக உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம். இதனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இந்தியன் ரயில்வே
இந்தியாவில் மிகப் பெரிய போக்குவரத்து நெட்வொர்க்கை கொண்ட இந்தியன் ரயில்வேயில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் போக்குவரத்து உயிர் நாடியாக ரயில்கள் உள்ளன என்றும் சொல்லலாம். மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள் என ஆயிரக்கணக்கான ரயில்களில் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகிறார்கள்.
பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை ஆயிரக்கணக்கான ரயில்வே நிலையங்களும் நாடு முழுக்க உள்ளன. டாய்லெட் வசதி, சொகுசு மற்றும் பாதுகாப்பான பயணம் ஆகியவற்றால் ரயில் பயணமே பயணிகளின் முதல் சாய்சாக இருக்கும். பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு புதுப்புது அப்டேட்களை ரயில்வே செய்து வருகிறது.
ரயில் ஒன் செயலி அறிமுகம்
அதன் ஒரு பகுதியாக தற்போது ரயில் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் ரயில் ஒன் என்ற செயலியை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. முன்பதிவு டிக்கெட், முன்பதிவு இல்லா டிக்கெட், தட்கல் என எல்லாத்துக்கும் இனி இந்த ஒரே ஒரு செயலி போதும். தனித்தனியாக வெவ்வேறு செயலிகளை வைத்திருக்க தேவையில்லை. அனைத்து ரயில் சேவைகளையும் அளிக்கும் 'ரயில்ஒன்' செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது, ரயில் சேவைகளை பெற வெவ்வேறு செல்போன் செயலிகள் இருக்கின்றன. குறிப்பாக எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய 'ரயில் கனெக்ட்' என்ற செயலி உள்ளது. இதேபோன்று புறநகர் ரயில்களில் பயணம் செய்ய வேண்டும் என்றால், டிக்கெட் எடுப்பதற்கு யுடிஎஸ் என்ற செயலி உள்ளது. இதேபோன்றும் தனியார் துறை செயலிகளும் இயங்கி வருகின்றன.
எப்படி பயன்படுத்துவது?
இந்த நிலையில் தான் டிக்கெட் எடுப்பதற்கு, பிஎன்.ஆர் ஸ்டேட்டஸ் பார்ப்பதற்கு, முன்பதிவு இல்லா டிக்கெட் பெறுவதற்கு என ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் 'ரயில்ஒன்' என்ற செல்போன் செயலியை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். ரயில்வே தகவல் சேவை மையத்தின் 40 ஆம் ஆண்டு விழாவின் போது இந்த செயலியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
ரயில் ஒன் செயலி மூலமாக இனி பயணிகள் எந்த ஒரு ரயில்வே தொடர்பான பயணங்களையும் திட்டமிட்டு கொள்ளலாம். இனிமேல் தனித்தனியாக வெவ்வேறு செயலிகளை வைத்திருக்க தேவை இருக்காது. இந்த செயலியை ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரிலும் இருக்கிறது. அங்கிருந்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். பாஸ்வேர்டு புதிதாக உருவாக்க தேவையில்லை. நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் லாக் இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி உள் நுழையலாம்.
ரயில்வே அதிகாரிகள் விளக்கம்
அதாவது யுடிஎஸ், ஐஆர்சிடிசி செயலியில் நீங்கள் என்ன லாக் இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டு வைத்து உள்ளீர்களோ அதனையே பயன்படுத்தி இந்த செயலியை ஓப்பன் செய்யலாம். ரயில்வே அதிகாரிகள் இது பற்றி கூறுகையில், ரயில் ஒன் செயலி அனைத்து தேவைகளுக்கும் இது ஒரே தீர்வாக இருக்கும். இந்த செயலியில், முன்பதிவு ரயில் டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட், ரயில்கள் மற்றும் பி.என்.ஆர். எண் குறித்த விசாரணை, பயண திட்டமிடல், ரயில் உதவி சேவைகள், ரயிலில் உணவு முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம்.
இ-வாலெட் வசதி
* சரக்கு தொடர்பான விசாரணை வசதி, டிக்கெட் முன்பதிவுக்கான பணத்தை போட்டு வைக்கும் 'ரயில்வே இ-வாலெட்' வசதி என பல்வேறு வசதிகள் இந்த செயலியில் உள்ளன.
* முதல்முறையாக ரயில்வே செயலியை பயன்படுத்துபவர்கள், குறைவான தகவல்களை அளித்து பதிவு செய்து கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம்.
* தகவல்களையோ, விவரம் தெரிந்துகொள்ள மட்டுமே விரும்புபவர்கள் லாக் இன் செய்யாமல் கெஸ்ட் லாக் இன் மூலமாக, தங்கள் செல்போன் எண் மற்றும் ஓடிபி-யை பயன்படுத்தி உள்ளே நுழையலாம்.
* ரயில் ஒன் செயலியின் நோக்கம் பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை அளிப்பதுதான். இதன் பயன்பாடு எளிதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications