சென்னையில் வெளுத்துக்கட்டும் மழை.. இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் தொடரும் - வானிலை மையம் அறிவிப்பு!
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட 19 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிக்குள் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது என்றும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. எழும்பூர் சென்டிரல், கிண்டி, ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கல், புரசைவாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, வடபழனி, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், அடையாறு, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
வரும் 18 ஆம் தேதி வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஞாயிற்றுக்கிழமையன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
வடதமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், தென்தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. ஓரிரு இடங்களில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. தென்தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள், வட கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லாரில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications