4 மாவட்டங்களில் மழை பெய்யும்.. சென்னை வானிலை மையம் ஜில், ஜில் அறிவிப்பு.. வெயில் குறையும்
சென்னை: காற்றின் சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 4 மாவட்டங்களில் குளு குளு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கத்திரி வெயில் மாதிரி இப்போதே பல இடங்களில் கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்த நேரத்தில் ஜில் ஜில் அறஇவிப்பு ஒன்றை செந்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது 4 தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யப் போகிறதாம்.

4 மாவட்டங்களில் மழை
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 24ம் தேதியான இன்று முதல் மாா்ச் 28ம் தேதிவரை 5 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் சுழற்சி
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கேரளா மற்றும் அதையொட்டிய மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் ஒரு கி.மீ. உயரம் வரை காற்றின் சுழற்சி நிலவுகிறது. இதனால் மழைக்கு வாயப்பு ஏற்பட்டுள்ளது.

மழை பெய்யும்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 24 -ஆம் தேதி முதல் மாா்ச் 28ம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை நிலவரம்
சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்க உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகம்
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 20 மி.மீ, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, தென்காசியில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நேற்று கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 2 செ.மீ, நாகர்கோவிலில் 1 செ.மீ மழை பெய்தது.