சினிமா தொடங்கும் முன் கஞ்சா ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் - முதல்வர் மு.க ஸ்டாலின்
திரைப்படம் தொடங்கும் முன்பு கஞ்சா, குட்கா ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் திரைத்துறையினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: திரைப்படம் தொடங்கும் முன்பு கஞ்சா, குட்கா ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக் கூடாது என்பது போல கஞ்சா பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Industry - CII) நடத்தும் இரண்டு நாள் தக்ஷின் 2022 உச்சிமாநாடு இன்றும் நாளையும் சென்னை டிரேட் சென்டரில் நடைபெறவுள்ளது.

வருங்கால சந்ததிகளுக்கு தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை சம்பந்தப்பட்ட வழிகாட்டல் நிகழ்ச்சியாக இருப்பதுடன், இத்துறையின் அடுத்தகட்ட நகர்வுகள் பற்றி இந்த மாநாட்டில் அறிந்துகொள்ள முடியும் என்று விழா அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாநாட்டில் பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.இம்மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பேசினார்.
நானும் சினிமா, நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளேன். எனக்கும் திரைப்படத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு காலத்தில் திரைப்பட தயாரிப்பில் இருந்தவன் நான். ஒரு சில படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். திமுகவையும் திரைத்துறையையும் பிரிக்க முடியாது என்றார். 2 ஆண்டுகாலம் கொரோனாவால் பல்வேறு துறையினர் பாதிப்படைந்தனர். அதில் திரையுலகமும் பாதிப்புக்குள்ளானது. லட்சக்கணக்கான மக்கள் திரைத்துறையை நம்பி உள்ளனர். பல்லாயிரம் கோடி வர்த்தகம் நடைபெறும் தொழிலாகும்.
திரைத்துறையில் முத்திரை பதித்த மாநிலம் தமிழ்நாடு என பேசினார். திரைத்துறையாக இருந்தாலும் செய்தித்துறையாக இருந்தாலும் தமிழ்நாடு மிக நீண்ட வரலாறு கொண்டதாகும். திரைப்படம் தொடங்கும் முன்பு கஞ்சா, குட்கா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக் கூடாது என்பது போல கஞ்சா ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இன்றைய தலைமுறையினர் சினிமாவைப் பார்த்து வளர்கின்றனர். அதில் முக்கியமான முற்போக்கு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
ஒரு திரைப்படம் எப்படி உருவாகுகிறது, அதன் நோக்கம், திட்ட அமைப்பு, தொழில்நுட்ப முக்கியத்துவம் போன்ற பல அம்சங்களை விளக்கும் வகையிலான பல சுவாரஸ்யமான கருத்தரங்குகள் மற்றும் உரையாடல்கள் தக்ஷின் 2022 மாநாட்டில் இடம்பெறுகின்றன.
திரைத்துறை மாணவர்கள் மற்றும் திரைத்துறையில் ஆர்வமுள்ள எவருக்கும் மிகுந்த பயனளிக்கும் மாநாடாக இது இருக்கவிருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர் திரு.டி.ஜி. தியாகராஜன், ஜெயம் ரவி, இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி, இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் நாள் தொடக்க விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
நடிகைகள் சுஹாசினி மணிரத்னம், குஷ்பு, டாப்ஸி பன்னு, பாடலாசிரியர் தாமரை, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ராதிகா சரத்குமார், திரி விக்ரம் ஶ்ரீநிவாஸ், ஜி.தனஞ்செயன், ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், கலை இயக்குநர் சாபு சிரில், உள்ளிட்ட பல பிரபலங்கள் தக்ஷின் 2022 மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். இரண்டாம் நாளின் இறுதி நிகழ்வாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறப்பு கௌரவம் வழங்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications