குடும்ப சூழலால் வேலைக்கு வர்றாங்க! தொலைதூரக் கல்வியில் படிக்க வைக்கலாமே! ராஜேஸ்வரிபிரியா வேண்டுகோள்!
சென்னை: குடும்பச் சூழ்நிலை காரணமாக பட்டப் படிப்பினை தொடர முடியாமல் பள்ளி படிப்புடன் வேலைக்கு வரும் இளம் பெண்களையும், இளைஞர்களையும் தொலைதூரக் கல்வி முறையில் பட்டபடிப்பு படிக்க வைக்குமாறு தொழில் நிறுவன அதிபர்களுக்கும், முதலாளிகளுக்கும் ராஜேஸ்வரி ப்ரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திறமையான பிள்ளைகள் கல்வியைத் தொடராமல் நிற்பதனை பார்த்தால் இதயம் கலங்குவதாக வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி ப்ரியா விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு;

சென்னை தி.நகர்: சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபலமான கடைகளில் திருநெல்வேலி,தென்காசி மற்றும் பல ஊர்களிலிருந்து இளம் வயதுடைய நிறைய பெண்களும், ஆண்களும் வேலை செய்வதனை காணமுடிகிறது. அதில் பலர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் ஆவர். குடும்பச் சூழ்நிலை காரணமாக பட்டப் படிப்பினை தொடர முடியாமல் பள்ளி படிப்புடன் வேலைக்கு வந்துவிடுகின்றனர்.
பிரபல கடைகளின் முதலாளிகள்: பிரபலமான கடைகளின் முதலாளிகளுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொலைதூரக் கல்வி முறையில் பட்டபடிப்பு படிக்க வையுங்கள். அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய உறுதுணையாக இருங்கள். கல்விக்கு உதவுவது என்பது வேறு எந்த உதவியுடனும் ஒப்பிட முடியாத அளவிற்கு ஒப்பற்ற உதவியாகும்.
இதயம் கலங்குகிறது: சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் தமிழ்நாடு முழுமையும் உள்ள அனைத்து தொழில் அதிபர்களும் இதனை செய்தால் தமிழகம் உயர்கல்வியில் நூறு சதவீதத்தினை நெருங்கும். ஏற்கனவே படிக்க வைக்கும் முதலாளிகளுக்கு மனமார்ந்த நன்றி. "திறமையான பிள்ளைகள் கல்வியைத் தொடராமல் நிற்பதனை பார்த்தால் இதயம் கலங்குகிறது". இவ்வாறு ராஜேஸ்வரி ப்ரியா தனது பதிவில் கூறியுள்ளார். ஆனால் இவர் சொல்வது போல், வேலைக்காக சேர்ந்தவர்களை தொலைதூரக் கல்வி மூலம் படிக்க வைத்தால் தங்களின் வியாபாரம் பாதிக்கும் என்பது பல முதலாளிகளின் எண்ணவோட்டமாக உள்ளது.












Click it and Unblock the Notifications