தீபாவளி, அண்ணாத்த ரிலீஸ்!.. நாளை அல்லது நாளை மறுநாள் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்?
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் நாளை அல்லது நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த் 2011 ஆம் ஆண்டு சிறுநீரக பாதிப்புக்காக நவீன டயாலிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ள சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை முடிந்து ஒரு வாரம் ஓய்வில் இருந்து விட்டு பின்னர் சென்னை திரும்பினார்.
அவர் பூரண உடல்நலம் பெற ரசிகர்கள் பலர் பல விதமான பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். இதை ரஜினிகாந்தும் அவரது குடும்பத்தினரும் இன்றும் மறக்காமல் பெருமைமிதத்துடன் சொல்வார்கள்.

ரசிகர்கள்
ரஜினிகாந்தும், ரசிகர்களின் பிரார்த்தனையால் நான் சென்னைக்கு திரும்பினேன் என உணர்ச்சிகரமாக பேசியிருந்தார். ரஜினிகாந்த் போரூர் ராமசந்திரா மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு சென்னை திரும்பும் வரை ரசிகர்கள் யாரும் நிம்மதியாக சாப்பிடவில்லை, உறங்கவில்லை. எப்போது தலைவரை பார்ப்போம் என காத்துக் கொண்டிருந்தார்கள்.

நிம்மதி
அதன் பின்னர் ரஜினி வந்தவுடன்தான் நிம்மதியான உறக்கமே அவர்களுக்கு வந்தது. அது போல் கடந்த ஆண்டு அண்ணாத்த ஷூட்டிங்கின் போது ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். 3 நாட்களில் வீடு திரும்பினார். அப்போதும் ரஜினிக்கு என்னவாச்சோ ஏதாச்சோ என பதறினார்கள். பின்னர் ரசிகர்கள் முன் ரஜினி தோன்றினார், ஆரவாரம் அடைந்தார்கள்.

அதிர்ச்சி
இந்த நிலையில் தற்போது மீண்டும் ரஜினிகாந்த் திடீரென கடந்த 28ஆம் தேதி இரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு காரணம் டெல்லியில் தாதா சாகேப் பால்கே விருதை ரஜினி பெற்ற போது உற்சாகமாக இருந்தார். பின்னர் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் தனது மனைவி லதாவுடன் சென்று சந்தித்திருந்தார்.

அச்சம்
இதையடுத்து டெல்லியில் இருந்து வந்த நாள் இரவே திடீரென மருத்துவமனையில் ரஜினி என்றவுடன் ரசிகர்கள் அச்சமடைந்துவிட்டார்கள். ரஜினிக்கு தலைச் சுற்றல் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு, அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் நலமாக இருக்கிறார். இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டவுடன்தான் ரசிகர்களுக்கு நிம்மதி வந்தது.

இரு நாட்கள்
எனினும் தீபாவளிக்கு இன்னும் இரு நாட்களே உள்ளதால் ரஜினி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனால்தான் தீபாவளி என ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். ரஜினிக்கு தற்போது சிகிச்சை எல்லாம் முடிந்து அப்சர்வேஷனில் வைத்து கவனித்து வருகிறார்கள். அவருக்கு ரத்தம் கட்டியாகாமல் இருப்பதற்கான பிளட் தின்னர்கள் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

டிரான்ஸ்பிளாண்டேஷன்
ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் மற்ற உறுப்புகள் பாதிக்காத வண்ணம் சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். குறைந்த வீரியம் கொண்ட டோஸ்களை அவருக்கு பரிந்துரை செய்து அவரை நாளைக்கு டிஸ்சார்ஜ் செய்யலாம் என தெரிகிறது. மேலும் 4 -ஆம் தேதி ரஜினியின் அண்ணாத்த படமும் ரிலிஸாகிறது. எனவே நவ.1 அல்லது 2 தேதிகளில் நிச்சயம் அவர் போயஸ் கார்டன் திரும்புவார் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications