நான் சொன்ன காக்கா கழுகு கதையை அப்படியே வேறு மாதிரி மாற்றிவிட்டாங்க.. ரஜினிகாந்த் ஆதங்கம்
சென்னை: நான் சொன்ன காக்கா கழுகு கதையை வேறு மாதிரி மாற்றிவிட்டாங்க.. என்று லால் சலாம் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா கதையை கூறினார். அப்போது ரஜினி கூறுகையில், காட்டுல பெரிய மிருகங்களை எப்பவும் சின்ன மிருகங்களை தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கும். உதாரணத்துக்கு காக்கா அனைவரையும் தொந்தரவு செய்யும், ஆனால், கழுகு யாரையும் தொந்தரவு செய்யாது.

காக்கா எப்போ எல்லாம் கழுகுக்கு தொல்லை தருகிறதோ அப்போ எல்லாம் கழுகு எதுவுமே செய்யாமல் மேலே பறந்து போய்விடும். ஆனால், காக்காவாலா சண்டை போட முடியும் ஆனால் அதனால், உயரமாக பறக்க முடியாது. உலகின் உன்னதமான மொழி மெளனம் தான். நான் காக்கா கழுகுன்னு சொன்ன உடனே, இவரை தான் சொல்றேன்னு சோஷியல் மீடியால சொல்லுவாங்க. இங்க குலைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. நாம வேலையை பார்த்துட்டு நேரா போயிட்டே இருக்கணும் " என்றார்.
இந்த கதை விஜய்யை பற்றித்தான் சொல்வதாக கூறி சமூக வலைதளங்களில் பெரிய விமர்சனங்களே எழுந்தது.. விஜய் ரசிகர்களை ரஜினி ரசிகர்கள் சீண்டுவதும், ரஜினி ரசிர்களை விஜய் ரசிகர்கள் சீண்டுவதும் என ஜெயிலர் படம் வந்த போது, பெரிய சண்டைய சமூக வலைதளங்களில் நடந்தது. ரஜினி எதை மனதில் வைத்து அப்படி சொன்னார் என்பதை அவரும் சொல்லவில்லை.. விஜய்யும் இதை பற்றி எங்குமே பேசவில்லை.. அதேநேரம் தனக்கு போட்டி என யாரும் இல்லை என்றே கூறினார்.
இதனிடையே லால் சலாம் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது, அன்று சொன்ன காக்கா கதைக்கு விளக்கம் அளித்தார். இதுபற்றி ரஜினிகாந்த் பேசுகையில், நான் கூறிய காக்கா கழுகு கதையை வேறு மாதிரி மாற்றி விட்டுடாங்க. எனக்கும், விஜய்க்கும் ஏதோ போட்டி என்பது போல பேசுறாங்க. அது என் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நடிகர் விஜய் என் கண்ணுக்கு முன்பு வளர்ந்த பையன். சின்ன வயதிலிருந்தே விஜய்யை பார்த்து வருகிறேன்.
'தர்மத்தின் தலைவன்' படப்பிடிப்பின்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்னிடம் வந்து, 'என்னுடைய பையன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது. படித்துவிட்டு நடிக்க வரட்டும். நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள்' என்று என்னிடம் வேண்டுகோள் வைத்தார்.. அப்போது நான் விஜய்யிடம் 'உங்களால் முடியுமா?' என்று கேட்டேன், அவரும் முடியும் என்றார்.
அதன் பிறகு விஜய் நடிப்பிற்கு வந்து உழைப்பால் உயர்ந்திருக்கிறார். தற்போது விஜய் நன்றாக நடித்து வருகிறார். தற்போது அரசியலுக்கு வரும் முயற்சி செய்து வருகிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். தற்போது விஜய்க்கும், எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலை உள்ளது.
எனக்கு போட்டி நான் தான் என நடிகர் விஜய்யே குறிப்பிட்டிருக்கிறார். என் படத்துக்கு நான் தான் போட்டி என நானே கூறியிருக்கிறேன். விஜய்யை போட்டியாக நான் நினைத்தால் அது எனக்கு மரியாதையாகவும், கவுரவமாகவும் இருக்காது. அதேபோல என்னை அவர் போட்டியாக நினைத்தால், அது அவருக்கும் மரியாதையாக இருக்காது. தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள் காக்கா, கழுகு கதையை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இது என் அன்பான வேண்டுகோள்" இவ்வாறு ரஜினிகாந்த் காக்கா கழுகு கதைக்கு விளக்கம் அளித்தார்.
முன்னதாக விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், என்னோட அப்பாவை பற்றி சமீபத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை சங்கி. எனக்கு இந்த வார்த்தையை கூறும்போது மிகவும் கோபமாக இருந்துச்சு. இதை நான் உங்களிடம் சொல்ல வேண்டும், எனது தந்தை சங்கி இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் சங்கியாக இருந்தால் 'லால் சலாம்' படத்தில் இருக்க மாட்டார் என்றார். அப்போது மகளின் பேச்சை கேட்ட ரஜினிகாந்த் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.












Click it and Unblock the Notifications