"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்!
சென்னை: ஜூன் 5ஆம் தேதி மக்கள் மேடை என்ற இயக்கத்தை நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் தொடங்கி இருந்தார். இதுதொடர்பாக லதா ரஜினிகாந்த் பேசுகையில், மக்கள் மேடை என்பது நாட்டில் உள்ள அனைவரும் தன் நாடு, தன் மாநிலம் மற்றும் தான் வாழும் இடத்தின் மீது காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் அன்பைப் பற்றியது.
நாம் ஆழ்ந்த ஞானம், வலுவான சமூக அடித்தளங்கள், தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்ட வளமான கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றை கொண்ட ஒரு புகழ்பெற்ற நாட்டில் இருக்கிறோம். மக்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தனர். இருப்பினும், இன்று நம்மில் பலரும் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம்.

தொழில்நுட்பமும் நவீனமயமாக்கும், சில வழிகளில் நம்மை இயற்கையில் இருந்து வேறுபடுத்தியுள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய மரபுகள் உள்ளன. நமது விவசாயிகள், குடிசைத் தொழில்கள் செய்பவர்கள், கைவினைஞர்கள், வணிகர்கள் ஆகிய அனைவருக்கும் இன்று இருப்பதை விட மிகப்பெரிய அளவில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் தேவைப்படுகின்றன.
நாம் மேற்கத்திய கொள்கைகளால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறோம். ஆனால் அடுத்த தலைமுறைக்கு நாம் எத்தகைய மரபை விட்டு செல்கிறோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். நாம் நம் பிள்ளைகளுக்கு எத்தகைய சமூகம், நட்பு, அரசு மற்றும் சுற்றுச்சூழலை விட்டு செல்கிறோம் என்பது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும்.
மக்கள் மேடை என்பது இதைத்தான் குறிக்கிறது. என் மாநிலத்திற்கு நான் எப்படி சேவை செய்ய முடியும்? என் நாட்டிற்கு நான் எப்படி சேவை செய்ய முடியும்? என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வது தான் அதன் நோக்கம். பொது நன்மைக்காக நமது திறமைகள்,. ஆற்றல், அறிவு மற்றும் நிபுணத்துவத்தை ஒன்றிணைப்பதே மக்கள் மேடை.
தற்கொலை தடுப்பு, மாணவர்களுக்காக ஆலோசனை வழங்குவது போன்ற முக்கிய திட்டங்களை நாங்கள் கொண்டிருப்போம். இவை அனைத்தும் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் மேடையில் ஒரு முக்கிய அங்கமாக மாறும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications