"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்!
சென்னை: பெண்களை இழிவுபடுத்தும் கலாச்சாரம் கொண்ட தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் மீதும், நடிகர் விஜய் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஞ்சனா நாச்சியார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளார்.
தவெகவில் பெண்களுக்கு மரியாதை இல்லை எனக்கூறி அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் தன்னை இழிவாக பேசிய தவெக தொண்டர்களை கண்டிக்கத் தவறிய நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் ரஞ்சனா நாச்சியார்.

இதுதொடர்பாக ரஞ்சனா நாச்சியார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,, "நான் தவெகவில் இருந்தபோது, விஜய் மேடையில் இருந்து பெண்கள் குறித்து சில ஏற்றுக்கொள்ள முடியாத பேச்சுகளை பேசியதை தொடர்ந்து, மகளிர் தினத்தன்று நான் கட்சியில் இருந்து விலகினேன். அவர் தொண்டர்களை சந்திக்க ஒருபோதும் தயாராக இருந்ததில்லை.
யூடியூப் வீடியோக்கள் மூலம் என் மீது தொடர்ச்சியான அவதூறும், வசைச்சொற்களும், ஆபாச வார்த்தைகளும் பரப்பப்படுவதாக நான் மாநில மகளிர் ஆணையத்திடம் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளேன். எனது புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடுகின்றனர். ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கின்றனர்.
ஆதவ் அர்ஜுனா வாய்ஸ் ஆஃப் காமன் என்று ஓர் அமைப்பை நடத்தி வருகிறார். அதைச் சார்ந்தவர்கள்தான் இப்படிச் செய்கின்றனர். என் மீது அவதூறு பரப்புவோர் அனைவருமே விஜய் படத்துடனும், அவரது கட்சிப் படத்துடனும் இருப்பவர்கள். இவர்களைக் கண்டித்தோ, இவர்களுக்கும் கட்சிக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டோ யாரும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
கட்சியை விட்டு விலகும் அனைத்துப் பெண்களும் ஆபாசமான வார்த்தைகளாலும், மிரட்டல் அழைப்புகளாலும் துன்புறுத்தப்படுகிறார்கள். தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் செய்யும் இந்த துன்புறுத்தலைக் தடுக்க விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது கட்சியை விட்டு விலகும் பெண்களை தவெக தொண்டர்கள் துன்புறுத்துவதை நிறுத்த விஜய் பொறுப்பேற்க வேண்டும்.
இதனால் பெண் உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலக அஞ்சுகிறார்கள். விஜய் வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் நாடகம் ஆடுகிறார். பெண்கள் மீது நடத்தப்படும் ஆன்லைன் தாக்குதல்களுக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்ப் பெண்கள் ஒரு பொறுப்பற்ற தலைவரைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய ரஞ்சனா, "நேற்று பொன்ராஜின் கருத்திற்கு எதிராக விஜய் புகார் அளித்துள்ளார். பொன்ராஜ் திமுக நிர்வாகியா? ஆனால் எது நடந்தாலும் திமுகதான் காரணம் என்று சொல்கிறார் விஜய். அவர் வீட்டில் எது நடந்தாலும், அவரது மனைவி விவகாரத்து கோரினாலும், அவரது கட்சியிலிருந்து யாராவது வெளியேறினாலும் உடனே திமுகதான் காரணம் என்று குற்றம் சொல்லி வருகிறார்." எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசியதாக பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தவெக தலைவர் விஜய் டிஜிபியிடம் நேற்று புகார் அளித்திருந்தார். இந்நிலையில், கட்சியை விட்டு விலகும் பெண்கள் குறித்து அவதூறாக பேசும் தவெக கட்சியினர் மீது விஜய் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி ரஞ்சனா நாச்சியார் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications