இனி ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சென்னை உள்பட 10 மாவட்டங்களில் அறிமுகம்.. உங்க ஊர் இருக்கா?
சென்னை: தமிழகத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை ஜூலை 1ம் தேதி முதல் சோதனை ரீதியாக தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பொருட்கள் மாதந்தோறும் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை எடுத்து கொண்டால் சுமார் 2.25 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் சென்று பயோமெட்ரிக்கில் தங்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
இதில் மூத்த குடிமக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் மட்டும் தங்களின் சார்பில் வேறு ஒருவரை வைத்து ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ள முடியும். இந்நிலையில் தான் தமிழகத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் தான் தமிழகத்தில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை ஜூலை 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக இந்த சோதனைக்கு 10 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்னை, கடலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, நீலகிரி, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை நடைபெற உள்ளது. முதற்கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவு, உணவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை முயற்சியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. அதன்படி வரும் சுதந்திர தினம் அல்லது செப்டம்பர் மாதத்தில் மாநிலம் முழுதும் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு, ரேஷன் பொருட்கள் நேரடியாக வினியோகம் செய்யப்பட உள்ளது.
அதன்படி மாதந்தோறும் முதல் வாரத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் சென்று விடும். இதனால் அவர்கள் ரேஷன் கடைக்கு அலைய வேண்டிய தேவை இருக்காது. வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை கொண்டு செல்லும் திட்டம் ஆந்திராவில் செயல்பாட்டில் இருந்தது. அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. இதையடுத்து அந்த திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த திட்டத்தை தமிழக அரசு தொடங்கி செயல்படுத்த உள்ளது.












Click it and Unblock the Notifications