வங்கியில் பணம் போட்டு பல ஆண்டுகளாக பணம் எடுக்காதவர்கள் அறிய வேண்டியவை.. ரிசர்வ் வங்கி முக்கிய முடிவு
சென்னை: வங்கிகளில் குவிந்து வரும் உரிமை கோரப்படாத டெபாசிட்டுகளை கணிசமாக குறைத்து, டெபாசிட்டுதாரர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் கணக்கு தொடங்கும்போது சமர்ப்பித்துள்ள வாரிசுதாரர் படிவத்தில் குறிப்பிட்டுள்ளவர்களின் விவரங்களில், இ-மெயில் முகவரி, செல்போன் எண்களை கூடுதலாக சேர்க்கலாமா? என வங்கிகள் ஆலோசனை வழங்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வங்கிகளில் பலர் பணம் போடுகிறார்கள். ஆனால் பலரது பணம் உரிமை கோரப்படாமல் வங்கி கணக்கிலேயே இருக்கிறது. வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் எந்த பரிவர்த்தனையும் செய்யாமல் 10 வருடங்களுக்கு மேல் இருக்கிறார்கள். இவ்வாறு பல ஆயிரம் கோடி பணம் அப்படியே வங்கி கணக்கில் கிடப்பில் உள்ளது.

அதேநேரம் வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனைகள் எதுவும் செய்யாமல் பயன்படுத்தவில்லை என்றால், அந்த கணக்கில் உள்ள பணம் ரிசர்வ் வங்கியின் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு (டெப்) தானாகவே மாற்றம் செய்யப்பட்டுவிடும். இவ்வாறு கிடைக்கும் நிதியை மக்களிடம் நிதி தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும், கல்வி திட்டங்களுக்காகவும் ரிசர்வ் வங்கி பயன்படுத்தி வருகிறது.
உரிமை கோரப்படாத, செயல்படாத வங்கி கணக்குகளில் இருந்து கடந்த 2020-21-ம் நிதியாண்டு ரூ.4 ஆயிரத்து 560 கோடி, 2021-22-ம் ஆண்டு ரூ.4 ஆயிரத்து 562 கோடி, 2022-23-ம் ஆண்டு ரூ.12 ஆயிரத்து 254 கோடி, 2023-24-ம் ஆண்டு 11 ஆயிரத்து 794 கோடி, 2024-25-ம் ஆண்டு (டிசம்பர் வரை) ரூ.7 ஆயிரத்து 946 கோடி ரிசர்வ் வங்கியின் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் உரிமை கோரப்படாத, செயல்படாத வங்கி கணக்குகளில் இருந்து குவியும் பணத்தின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இப்படி வங்கிகளில் குவியும் உரிமை கோரப்படாத டெபாசிட்டுகளை கணிசமாக குறைத்து, டெபாசிட்டுதாரர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்தவகையில், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் கணக்கு தொடங்கும்போது சமர்ப்பித்துள்ள வாரிசுதாரர் படிவத்தில் குறிப்பிட்டுள்ளவர்களின் விவரங்களில், இ-மெயில் முகவரி, செல்போன் எண்களை கூடுதலாக சேர்க்கலாமா? என்பது தொடர்பாக ஆலோசனைகளை வழங்குமாறு இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில், வங்கி சட்ட விதிகள் திருத்த மசோதாவின்படி வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் 4 பேரை அந்த கணக்குகளுக்கு வாரிசுதாரர்களாக வைத்துக்கொள்ள முடியும். உரிமை கோரப்படாத டெபாசிட்டுகளை குறைக்க ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றும், வங்கி கணக்குதாரர்கள் முகவரி மாறி செல்லும்பட்சத்தில் அவர்களின் வாரிசுதாரர்களை கண்டுபிடிக்க உதவிக்கரமாக இருக்கும் என்றும் வங்கி அதிகாரிகள் கூறினார்கள்.


Click it and Unblock the Notifications
