உஷார் மக்களே! சென்னையில் புது வீடு வாங்க இது சரியான நேரமா? ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சொல்வது என்ன?
சென்னை: சமீபத்தில் நாடு முழுவதும் 3 முக்கிய நகரங்களில் வீடுகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த விலையுயர்வு சென்னையையும் பாதித்திருக்கிறது. இதனால் சென்னையில் சொந்த வீடு வாங்க விரும்புவோரின் கனவு பகல் கனவாகியுள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அகில இந்திய கூட்டமைப்பான கிரெடாய், காலியர்ஸ் மற்றும் லையாசஸ் ஃபோரஸ் ஆய்வு நிறுவனங்கள் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. நிலங்களின் மதிப்பு இந்த அறிக்கைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டில் புது டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் நிலம் மற்றும் வீடுகளின் விலையானது கடந்த ஆண்டை விட சுமார் 15 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.

தற்போதைய சூழலில் புலம் பெயர்தல் என்பதை தவிர்க்க முடியாததாகியுள்ளது. வேலை, படிப்பு, பொருளாதாரம், மருத்துவம் என பல்வேறு காரணங்களுக்காக மக்கள் பெரும் நகரங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் இவர்களுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கிறதா? என்று கேட்டால் அது சந்தேகம்தான்.
இப்படியாக நகரங்களில் புலம் பெயர் தொழிலாளர்களாக வாழ்பவர்கள் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று விரும்புவதற்கு மேற்குறிப்பிட்ட காரணமும் ஒன்று. ஆனால் எல்லோராலும் இப்படி வீடுகளை வாங்க முடிகிறதா? என்று கேட்டால் கிடையாது என்றுதான் பதில் கிடைக்கிறது. காரணம் வீடுகளின் விலையேற்றம்.
டெல்லியை எடுத்துக்கொண்டால் கடந்த 11 ஆண்டுகளில் தொடர்ந்து வீடுகளின் விலைகள் உயர்ந்துதான் வந்திருக்கிற. அதேபோல இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 16 சதவிகிதம் விலை உயர்ந்திருக்கிறது. டெல்லியில் துவாரகா எக்ஸ்பிரஸ்வே பகுதியில் ஆண்டுக்கு 59% அளவுக்கு வீடுகளின் விலைகள் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல கோல்ஃப் கோர்ஸ் சாலையில் உள்ள வீடுகள் 49% உயர்ந்துள்ளது.
டெல்லியை தவிர அதிக அளவு விலையேற்றம் கொண்டுள்ள நகரங்களாக மேற்கு வங்கத்தின் கொல்கத்தா இருக்கிறது. கொல்கத்தாவில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வீடுகளின் விலை கடந்த ஆண்டை விட 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது இங்கு ஒரு சதுர அடி நிலத்தின் விரை ரூ.7,211 ஆக இருக்கிறது. இதைத் தொடர்ந்து பெங்களூரில் வீடுகளின் விலை 14 சதவிகிதம் அதிகரித்துள்ளன. தற்போது பெங்களூரில் ஒரு சதுர அடி ரூ.8,748க்கு விற்பனையாகிறது.
சென்னையிலும் இதேபோல வீட்டின் விலைகள் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளன. இங்கு ஒரு சதுர அடி சுமார் ரூ.7,395க்கு விற்பனையாகிறது. ஹைதராபாத்தில் ரூ.10,410ஆக விற்பனையாகிறது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 13 சதவிகிதம் அதிகம். மகாராஷ்டிராவின் புனேவிலும், 11 சதவிகிதம் விலை உயர்ந்து ஒரு சதுர அடி ரூ.8,352 ஆக விற்பனையாகிறது.
மும்பையில் ஒரு சதுர அடி ரூ.19,219க்கு விற்பனையாகிறது. இது கடந்த ஆண்டை விட 2 சதவிகிதம் அதிகமாகும். இந்த விலையுயர்வு குறித்து கிரெடாய் கூறுகையில், கொரோனா தொற்றுக்கு பின்னர் பலரும் புதிய வீடுகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். மூலப்பொருட்களின் விலையுயர்வும், புதிய வீடுகளுக்கான போட்டியும் இந்த விலையேற்றத்திற்கு காரணம் என்று கிரெடாய் தலைவர் போமன் இரானி கூறியுள்ளார்.
எது எப்படி இருந்தாலும், புதிய வீடுகளை வாங்க வேண்டும் என்கிற சாமானிய மக்களின் கனவு இந்த முறையும் பலிக்காமல் போயுள்ளது என்பதுதான் யதார்த்தமாக உள்ளது.












Click it and Unblock the Notifications