'ஷாக்..' ஒரு மாதத்திற்கு பின்னர்.. தலைநகர் சென்னையில் மீண்டும் 200ஐ கடந்த கொரோனா.. என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாகவே தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு 170 என்ற அளவிலேயே இருந்த நிலையில், சரியாக 30 நாட்களுக்குப் பின் வைரஸ் பாதிப்பு மீண்டும் 200ஐ கடந்துள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி இறுதி முதலே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அதேபோல தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் வைரஸ் பரவல் உச்சமடைந்தது.
இதனால் அப்போது தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல் இரண்டு வாரங்களுக்கு எவ்வித தளர்வுகளும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

கொரோனா 2ஆம் அலை
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது. ஊரடங்கிற்கு முன்பு, மாநிலத்தில் தினரசி வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்திருந்தது. அதேபோல தலைநகர் சென்னையிலும் தினசரி வைரஸ் 3000ஐ கடந்து இருந்தது. தலைநகர் சென்னையில் சில மருத்துவமனைகளில் பல மணி நேரம் வரை நோயாளிகள் ஆம்புலன்சிலேயே காத்திருக்க வேண்டிய அவலமும் ஏற்பட்டது.

தலைநகர் சென்னை
தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் எடுத்த தீவிரமான நடவடிக்கைகள் காரணமாகத் தலைநகரில் வைரஸ் பாதிப்பு விரைவாகக் குறையத் தொடங்கியது. அந்த சமயத்தில் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த ஆணையர் ககன் தீப் பேடி எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் பெரும் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு காரில் வைத்து ஆக்சிஜன் அளிக்கும் கார் ஆம்புலன்ஸ் திட்டத்தைப் பிரதமர் மோடியே பாராட்டி இருந்தார்.
Recommended Video

கடந்த ஒரு மாதம்
இப்படி எடுக்கப்பட்ட தொடர் முயற்சிகள் காரணமாக ஆயிரங்களில் இருந்த தினசரி வைரஸ் பாதிப்பு நூறுக் கணக்கில் குறைந்தது. தலைநகர் சென்னையில் கடந்த பல வாரங்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கும் கீழாகவே பதிவாகியுள்ளது. குறிப்பாகக் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குப் பின்னர் தினசரி பாதிப்பு 200ஐ கடக்கவில்லை. கடைசியாக ஆகஸ்ட் 17இல் தினசரி பாதிப்பு 2019ஆக இருந்தது. கடந்த நான்கு வாரமாகவே தினசரி கொரோனா வைரஸ் பெரும்பாலும் 170- 180 என்ற விகிதத்திலேயே இருந்து வந்தது.

மீண்டும் 200ஐ கடந்த கொரோனா பாதிப்பு
இந்தச் சூழலில் சுமார் 4 வாரங்களுக்குப் பின்னரே தலைநகர் சென்னையில் வைரஸ் பாதிப்பு மீண்டும் 200ஐ கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களில் 200 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதாவது டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் எனப்படும் TRP 1 என்ற அளவிலேயே தொடர்கிறது. அதேநேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இப்போது தலைநகரில் 1790 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் அச்சம்
சென்னை மட்டுமின்றி மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. 9 முதல் +2 வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இருப்பினும் கூடுதல் தளர்வுகள் காரணமாகவே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மிகக் குறைந்த அளவு அதிகரித்துள்ளதாகவும் அதேநேரம் இதனால் அச்சப்படத் தேவையில்லை என்றும் ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications