தாம்பரத்தில் ரூ.10 கோடி நிலம் அபகரிப்பு.. பத்திரப்பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் மீண்டும் கைது
சென்னை: சேலம்-மதுரை (பொறுப்பு) சரக பத்திரப்பதிவுத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த ரவீந்திரநாத் என்பவர், ரூ.10 கோடி நிலம் அபகரிப்புக்கு உடந்தையாக இருந்ததாக மேலும் ஒரு நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தாம்பரம் வரதராஜபுரத்தில் சையது அமீன் என்பவருக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை காந்தம்மாள் என்பவரின் பெயருக்கு போலியான ஆவணங்கள் மூலம் மாற்றுவதற்கு உடந்தையாக இருந்தாக கைதாகி உள்ளார்.
சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் , மறைமலைநகர் , பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், சிட்லம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் நிலத்தின் மதிப்பு கற்பனைக்கும் எட்டா அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் சிலர் பிறரின் சொத்துக்களை ஆள்மாறாட்டம் செய்து, சில பத்திரப்பதிவு துறை அதிகாரிகளின் துணையுடன் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது. பள்ளிக்கரணை ஏரி பகுதியில் ஏராளமான நீர்நிலைகள் பட்டா போடப்பட்டதாக புகார்கள் இன்று வரை உள்ளது. இதுபற்றி விசாரணைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் சேலம்-மதுரை (பொறுப்பு) சரக பத்திரப்பதிவுத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த 57 வயதாகும் ரவீந்திரநாத் என்பவர் தான், கடந்த 2021-ம் ஆண்டு தென்சென்னை பத்திரப்பதிவு துறை பதிவாளராக பணியாற்றினார். அப்போது அவர், சென்னை பெருங்களத்தூரில் கலைவாணி என்பருக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பதிவு செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கலைவாணி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தாம்பரம் சார்-பதிவாளரிடம் உதவியாளராக பணியாற்றிய லதா உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இதில் லதா என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் சேலம்-மதுரை (பொறுப்பு) சரக பத்திரப்பதிவுத்துறை டி.ஐ.ஜி. ரவீந்திரநாத் கடந்த செப்டம்பர் 25-ந்தேதி அன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலத்தில் கைது செய்து சென்னை அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்துள்ளார்கள்.
இந்த நிலையில் தாம்பரம் வரதராஜபுரத்தில் சையது அமீன் என்பவருக்கு சொந்தமாக ரூ.10 கோடி மதிப்பிலான நிலம் இருக்கிறது. இதனை காந்தம்மாள் என்பவரின் பெயருக்கு போலியான ஆவணங்கள் மூலம் மாற்றுவதற்கு ரவீந்திரநாத் உடந்தையாக இருந்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனால் இந்த முறைகேடு வழக்கிலும் பத்திரப்பதிவுத்துறை டி.ஐ.ஜி. ரவீந்திரநாத் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது அவரை கைது செய்ததற்கான ஆவணங்களை புழல் சிறை அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழங்கி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications